×

ஏகாதசி தரிசன டிக்கெட் முன்கூட்டியே விநியோகம்: திருப்பதியில் பக்தர்கள் அலைமோதல்

திருமலை: திருப்பதியில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பதால் சொர்க்கவாசல் வழியாக 10 நாட்களுக்கான இலவச தரிசன டிக்கெட் முன்கூட்டியே விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு  வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாளை அதிகாலை 1.45  மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 2 மணி முதல் 5 மணி வரை மத்திய,  மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் சுவாமி  தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பிறகு பக்தர்கள்  அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து வரும் 11ம்தேதி இரவு 12 மணி வரை  சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் சொர்க்கவாசல்  வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது என தேவஸ்தான  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை முதல் 11ம்தேதி வரை சொர்க்க வாசல்  வழியாக தரிசிக்க திருப்பதியில் 9 இடங்களில் அமைக்கப்பட்ட 96 கவுன்டர்களில் 4  லட்சத்து 50 ஆயிரம் இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்களை  பெறும் பக்தர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில்  மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஆகம பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஏற்கனவே 2 லட்சம் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் பக்தர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலவச டோக்கன்கள் இன்று மதியம் 2 மணிக்கு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று மாலை முதலே திருப்பதியில் உள்ள அந்தந்த டிக்கெட் கவுன்டர்கள் முன் திரள தொடங்கினர். கூட்ட நெரிசல் அதிகரித்ததால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மதியம் 2 மணிக்கு வழங்க இருந்த டிக்கெட்டுகளை இன்று அதிகாலை 5 மணி முதல் வழங்கும் பணியை தேவஸ்தானம் திடீரென தொடங்கியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 10 நாட்களுக்குரிய டோக்கன்கள் வழங்கப்படுவதால் அதில் குறிப்பிட்ட நாளில் மட்டுமே பக்தர்கள் வந்து சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாளை முதல் 11ம்தேதி வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களும் திருமலைக்கு ஆந்திர அரசு பஸ்சில் பயணிக்கலாம் என போக்குவரத்து கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags : Ekadasi ,Darshan ,Tirupati , Ekadasi Darshan Ticket Advance Distribution: Devotees flock to Tirupati
× RELATED மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை