×

ஆஸி. எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பன்ட்டிற்கு மாற்று வீரர் இஷான்கிஷன் தான்: மாஜி. தேர்வு குழு தலைவர் கணிப்பு

மும்பை: கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த மாதம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் ஆட முடியாது. அவரது இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியின் மாற்று விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இதுபற்றி முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வு குழு முன்னாள் தலைவருமான சபாகரீம் கூறியிருப்பதாவது:

“ரிஷப் பன்ட் அணியில் இருந்த பொழுது அவரால் நாம் வெற்றிகளை டெஸ்டில் பெற்றுள்ளோம். ஏனென்றால் அவர் மேட்ச் வின்னிங் நாக்-கை விளையாடியதோடு வேகமாகவும் விளையாடி ரன் சேர்த்தார். இது எதிராளிக்கு அழுத்தத்தை கொடுத்தது. மேலும் இந்திய பந்துவீச்சாளர்கள் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த நேரத்தையும் கொடுத்தது. விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கே.எஸ்.பரத்தை டெஸ்ட் விக்கெட் கீப்பராக இந்திய அணி நிர்வாகம் உருவாக்கி வருவது உண்மைதான். ஆனால் அவர் ரிஷப் பன்ட் அணியில் செய்து வந்ததை செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். எனது தேர்வு இஷான் கிஷன் தான்.

அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை. ஆனால் சமீபகாலமாக ஜார்கண்ட் அணிக்காக சிவப்பு பந்து போட்டிகளில் அதிரடியாக நன்றாக விளையாடி வருகிறார். அதே சமயத்தில் சஞ்சு சாம்சன் இருக்கிறார். விக்கெட் கீப்பிங் மற்றும் ரிஷப் பன்ட் விளையாடிய முறையில் விளையாட யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று பார்க்க வேண்டும். இஷான் கிஷன் இதற்கு சரியாக இருப்பார் என்பது எனது கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Ishankishan ,Rishabh Pant ,Maji ,Selection Committee , Aussie Ishankishan is the replacement for Rishabh Pant in the Test series against: Maji. Selection Committee Chairman Prediction
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...