திமுக பிரமுகர் எம்.கே.தண்டபாணி சிலை திறப்பு: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்தவர்எம்.கே.தண்டபாணி (68). திமுகவை சேர்ந்த இவர், கடந்த 5 முறை ஒன்றிய செயலாளராகவும், 4 முறை பேரூராட்சி  தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு நோய் பாதிக்கப்பட்டு தண்டபாணி இறந்தார்.

இந்நிலையில் முதலாமாண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், செல்வம் எம்பி, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு திருஉருவ சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 5 பேருக்கு தள்ளுவண்டி, 6 பேருக்கு இஸ்திரி பெட்டி, 4 பேருக்கு தையல் இயந்திரம் மற்றும் நகராட்சியில் உள்ள அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் 3 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட்டது.

இதில், நகரமன்ற வார்டு கவுன்சிலர்கள், அனைத்து கட்சி பொது நல சங்கத்தினர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எம்.கே.தண்டபாணி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதுபோல் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் எம்.கே.தண்டபாணியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்தந்த வார்டு செயலாளர்கள் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் தொடங்கிய அமைதி ஊர்வலம் ஜிஎஸ்டி சாலையாக வழியாக வந்து அவரது நினைவு இல்லத்தில் முடிவடைந்தது.

Related Stories: