×

புத்தாண்டை குதூகலமாக கொண்டாட தேக்கடிக்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பு: வாகமண்ணிலும் திரண்டனர்

கம்பம்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தேக்கடி, வாகமண்ணில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கேரள மாநிலம், தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். புத்தாண்டு விடுமுறையில் இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தேக்கடியில் யானை சவாரி, டைகர்வியூ, நேச்சர்வாக், பார்டர்வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இங்குள்ளன. இருப்பினும் படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம் என்பதால், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விருப்பத்தில் படகுச்சவாரி முதலிடம் வகிக்கிறது.

தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடிக்கு மேல் உள்ளதால், தேக்கடி படகுத்துறை வரை கடல்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நீரை குடிக்க வரும் மான், காட்டெருமை, யானைக்கூட்டங்கள் சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தாக உள்ளது. இந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறையை கொண்டாட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் தேக்கடியில் குவிந்துள்ளனர். இடுக்கி மாவட்டம் ஏலப்பாறை அருகே கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வாகமண் பகுதியை, கடந்த 2 நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தற்கொலை விளிம்பு, மொட்டைக்குன்று, பைன் மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம், குரிசுமலை, முரகன்மலை ஆகியவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். வாகமண் பகுதியில் கேரள வனத்துறையும், சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதால் இங்கும் புத்தாண்டை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

* 5 ஆண்டுகளுக்கு பின் ஆமை பார்க் திறப்பு
பெரியாறு புலிகள் காப்பகத்துக்குள் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி படகுத்துறைக்கு செல்லும் வழியில் ஆமை பார்க் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள மர தொட்டிகளில் அமர்ந்து வனத்தின் அழகை ரசித்து வருகின்றனர். தேக்கடி படகுத்துறை அருகே இருந்த வாகன நிறுத்தம் ஆனவச்சாலுக்கு மாற்றப்பட்டபோது கடந்த 2017ல் இந்த பார்க் மூடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பின் புத்தாண்டை ஒட்டி சுற்றுலாப்பயணிகளுக்காக பூங்காவை கேரள வனத்துறையினர் புத்துயிர் பெறச் செய்துள்ளனர். ஆமை பார்க்கில் ஓய்வெடுத்தவாறே மான்கள், மலை அணில், யானைகள், முள்ளம்பன்றிகள் மற்றும் பிற பறவைகளை கண்டு களிக்கலாம்.

Tags : Thekkady ,New Year , Tourists Invade Thekkady to Celebrate New Year: Vagaman too
× RELATED தேக்கடி மலர்க் கண்காட்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு