திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான இன்று (1ம்தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (2ம் தேதி) நடைபெறுகிறது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் விழாக்கள் நடைபெறுகிறது. இதில் முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும்.
இதில் உள்ளூர் மட்டுமில்லாது, வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறப்பு நாளை (2ம் தேதி) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு (விருச்சிக லக்னத்தில்) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்படுகிறார்.
அதன்பின் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக்கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் செல்கிறார். அதற்கு முன்னதாக, நம்பெருமாள் விரஜாநதி மண்டபத்தில் பட்டர்களின் வேதவிண்ணப்பங்களை கேட்டருளுகிறார். அதன்பின் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்படுகிறது. அப்போது அங்கு காத்திருக்கும் பக்தர்கள் வெள்ளத்துடன் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள பூந்தட்டிகள் வழியாக ஆலிநாடான் திருச்சுற்றில் உள்ள மணல்வெளி வழியே அகளங்கன் திருச்சுற்றில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் காலை 5 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
அதன் பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு சென்ற பின்னர் அங்கிருந்தபடியே நள்ளிரவு வரை பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.