×

காரியாபட்டியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் வைகை ஆற்று குடிநீர்: ரூ.பல கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள், திமுக ஆட்சியால் புத்துயிர் பெறும் பேரூராட்சி

காரியாபட்டி: காரியாபட்டியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், ரூ.10 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் வைகை ஆற்று குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியால் பேரூராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பேரூராட்சி, கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக வசம் இருந்து வந்தது. இதனால், எந்த ஒரு வளர்ச்சித் திட்டப்பணிகளும் நடைபெறவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பேரூராட்சியில் குடிநீர், வாறுகால், சிறுபாலங்கள், நவீன மயமாக்கப்பட்ட எரிவாயு தகனமேடை உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை நிறைவேற்றக்கோரி, தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்முறையாக காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியது. திமுக சேர்மனாக செந்தில் பொறுப்பேற்று 10 மாத காலத்தில் தேர்தல் வாக்குறுதியாக காரியாபட்டி பேரூராட்சியில் சுமார் ரூ.7 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பூமிபூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தார். ரூ.20 லட்சத்தில் ஊருணி மேம்பாடு: பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில், ரூ.20 லட்சத்தில் ஊருணி மேம்பாடு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.1.38 லட்சத்தில் நவீன மயமாக்கப்பட்ட கட்டிடத்துடன் கூடிய எரிவாயு தகனமேடையும், 15வது மானிய குழு திட்டத்தில் ரூ.56 லட்சம் மதிப்பிலும் பணிகள் துவங்கப்பட்டன.

நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.38 லட்சத்தில் நடைபெறும் நவீனமயமாக்கப்பட்ட எரிவாயு தகனமேடை பணி மற்றும் வாறுகால் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை மதுரை மண்டல பேரூராட்சிகளின் இயக்குனர் சேதுராமன் மற்றும் சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ரூ.56 லட்சத்தில் அங்கன்வாடி பணிகள்: பேரூராட்சியில் கரிசல்குளம், அச்சம்பட்டி, நெடுங்குளம், ஜெகஜீவன்ராம் நகர், காமராஜர் காலனி ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி புதிய கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 15வது மாநில நிதிக்குழுவில் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி சுமார் 50 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல அனைத்து வார்டுகளிலும் தெருவில் உள்ள சிறுகுறு 25 மேற்பட்ட பாலங்கள் சுமார் 12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

மேலும், குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்துக் கொண்டு செல்ல குப்பை வண்டிகள் பராமரிக்கும் பராமரிப்பு கூடம் சுமார் ரூ.19 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10வது வார்டில் உள்ள ஊருணியை தூர்வாரி கரையைச் சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. கரிசல்குளம் சாலைக்கு நிதி ஒதுக்கீடு: சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக இருந்த கரிசல்குளம் சாலை நான்குவழிச்சாலையில் இருந்து கரிசல்குளம் ஊருக்குள் செல்லும் வரை ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்ச்சாலையும், 10வது வார்டு சக்தி மாரியம்மன்கோவில் பின்புறம் செல்லும் செவல்பட்டி மயானச்சாலை, பெருமாள் கோவில் வரை ஒரு கோடி மதிப்பிலான தார்ச்சாலையும் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வீடுகளுக்கு வைகை ஆற்று குடிநீர்: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தனிப்பட்ட முயற்சியால் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் தனியாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டி பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்ட வரையறையை, முதலமைச்சரிடம் கொண்டு சேர்த்து, அதற்கான முதற்கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அம்ருத் 2.0 திட்டத்தில் சுமார் 10 கோடி மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தில் மேலும் 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் நீதிமன்றம் வரும்...: காரியாபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட 130 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், நீதிமன்ற வழக்குகளுக்காக விருதுநகர், திருவில்லிபுத்தூர் ஆகிய நகரங்களுக்கு செல்கின்றனர். பொதுமக்களின் அலைச்சல்களை குறைப்பதற்கும், வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று, தொழில்துறை அமைச்சரின் தீவிர முயற்சியால், விரைவில் நீதிமன்றம் உருவாக உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு காரியாபட்டி கே.செவல்பட்டியில் உள்ள பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக செயல்படுவதற்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடப் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.ஒரு கோடி 25 லட்சம் மதிப்பிலான வீடு கட்டும் வேலை உத்தரவை பயனாளிகளுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி துவக்கி வைத்தார்.

420 இடங்களில் தெருவிளக்குகள்: 10 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சியில், புதிய குடியிருப்புகளுக்கு தெருவிளக்குகள் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது ரூ.60 லட்சம் மதிப்பிலான 420 இடங்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு காரியாபட்டி பேரூராட்சியில், வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, செயல்படாமல் உள்ள சுத்திகரிக்கப்பட்ட 3 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை பராமரிப்பு செய்து, மேலும், இடங்களில் புதிதாகவும் அமைக்கப்பட உள்ளது. காரியாபட்டி சேர்மன் செந்தில் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக காரியாபட்டி பேரூராட்சியில், எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், முதல்முறையாக திமுக பேரூராட்சியை கைப்பற்றியவுடன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ஆலோசனைப்படி, மக்கள் திட்ட பணிகளை செய்து வருகிறோம். மேலும், நகரில் பஸ் ஸ்டாண்டு விரிவாக்கம், வணிக வளாகம் மராமத்து, அனைத்து வார்டுகளுக்கும் தெருவிளக்கு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை சுமார் 10 கோடி மதிப்பில் தொழில் துறை அமைச்சர் துவங்கி வைத்துள்ளார். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை பராமரிப்பு செய்தும், மேலும் ஆறு இடங்களில் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுபோல பல திட்டங்களை மக்களுக்காக செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Vaigai River ,Karyapatti ,Djagam , Drinking water from Vaigai river to all houses under Chief Minister's scheme in Kariyapatti: Various projects worth Rs. multi-crore, municipality to be revived by DMK regime
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் கழிவுநீரால் மாசடையும் மூலவைகை ஆறு