வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை: வணிகவரித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை ரத்து செய்யக் கோரி திருப்பூரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் திருப்பூர் ஸ்ரீ அன்னப்பூர்ணா ஹோட்டல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் வரி வருவாய் முக்கிய பங்காற்றுகிறது.  வரி ஏய்ப்பு செய்வதால் நாடு மிகப்பெரிய பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

தங்களது உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் நாட்டில் காளான்களை போல அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தகுந்த அபராதம் விதிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.  சில ஓட்டல்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தரமான உணவு வழங்காததால் பொதுமக்களுக்கு உடல் ரீதியான கோளாறுகளை ஏற்படுவது வேதனை அளிக்கிறது என்று கூறி திருப்பூர் ஸ்ரீ அன்னப்பூர்ணா ஓட்டல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: