×

கோயில்களில் நடக்கும் விஷயங்களை அறநிலையத்துறையின் 3வது கண் கண்காணிக்கிறது: n குற்றவாளிகளுக்கு பயம் தரும் n ஆணையர் குமரகுருபரன் தகவல்

சென்னை: கோயில்களை 3வது கண் எனப்படும் சிசிடிவி கேமரா கண்காணித்து வருகிறது என ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்து சமய அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. அவற்றில் 48 முதுநிலை கோயில்கள். இந்த முதுநிலை கோயில்களுக்கு அடிக்கடி சென்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கோயில்களில் தவறு நடக்காமல் தடுப்பதும், கோயில்களில் அன்றாட நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா என்பதை தினமும் கோயில்களுக்கு சென்று கண்காணிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும், அமைச்சர், அதிகாரிகள் வரும்போது மட்டும் ஊழியர்கள், அதிகாரிகள் சுதாரித்து தவறுகள் நடக்காதது போல இருப்பது வழக்கம். மற்ற நாட்களில் குற்றங்கள் நடக்கிறது. குறிப்பாக சென்னையில் இருக்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ராமநாதபுரத்தில் நடக்கும் குற்றங்களை எவ்வாறு கண்காணிப்பார் என்ற கேள்விகள் பொதுமக்கள் மனதில் எழும்.

இதுபோன்ற கேள்விகள் வருவதற்கு வாய்ப்புகள் கூட கொடுக்க முடியாத அளவுக்கு அறநிலையத்துறையில் மூன்றாம் கண் என்ற ஒன்று செயல்பட்டு வருகிறது. அதாவது, 48 முதுநிலை கோயில்களையும் சிசிடிவி கேமரா உதவியுடன் கண்கணிக்கும் பணியினை சென்னை அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை சிறப்பாக செய்து வருகிறது.

இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கூறுகையில்:
அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்களை பொறுத்தவரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தலைமை நிர்வாகம் கவனித்து வருகிறது என்பது பொதுமக்கள் யாருக்கும் தெரிவதில்லை. 24 மணி நேரமும் இந்த கட்டுப்பட்டு அறை செயல்படுகிறது. தமிழகத்தில் உள்ள  48 முதுநிலை கோயில்களிலும் என்ன நடக்கிறது என்பதை இங்கு இருந்தே கண்காணித்து வருகிறோம். இந்த கட்டுப்பாட்டு அறையை பொறுத்தவரை திட்டமிடல் அதிகாரியின் கீழ் 5 பொறியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

அடுத்தது பிரசாதம் தயாரிக்கும் இடம். பிரசாதங்கள் தூய்மையான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்று கண்காணிப்போம். அடுத்தது கோசலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அவற்றிற்கு முறையான உணவு மருத்துவம் போன்றவை கொடுக்கப்படுகிறதா என்று கண்காணித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் 129 கோசலைகள் உள்ளன. மேலும் 27 கோயில்களில் 29 யானைகளும் உள்ளன.  இவற்றினை தூய்மையாக பராமரிப்பு செய்ய வேண்டும். அதற்காக அடிக்கடி கண்காணித்து அறிவுரைகள் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருப்போம்.

இந்த கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்த பிறகு தான்  துவங்கி வைத்தார். தற்போது 56 எல்.இ.டி டிவிகள்  வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் கூடுதல் டிவிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த கோயில்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையை கோயில் இணை ஆணையர் கண்காணித்து வருவார். அவர்களுக்கும் மேல் இருந்து நாங்கள் இதனை கண்காணித்து வருகிறோம். கேமராக்கள் அதிக அளவில் இருப்பதால் குற்றங்கள் நடைபெறுவதில்லை.

ஏனென்றால்  நம்மை ஒருவர் கண்காணித்து கொண்டே இருக்கிறார் என்ற பயம் தவறு செய்ய நினைப்பவர்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். இதனால் பொதுமக்களும் பயம் இல்லாமல் கோயிலுக்கு வருகின்றனர். அதிகபட்சமாக பழனி முருகன் கோயிலில் 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை போலவே 48 முதுநிலை கோயில்களிலும் ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறைகள் உள்ளன. அதற்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தலைமையாக செயல்படுவார். அமைச்சர் சேகர் பாபுவை பொறுத்தவரை அலுவலகத்துக்கு வரும்போது முதலில் இந்த கட்டுப்பாட்டு அறையை தான் பார்வையிடுவார். அதன் பிறகே மற்ற பணிகளை மேற்கொள்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இனி யானை வாங்க முடியாது
உயர் நீதிமன்ற உத்தரவின்படி இனிமேல் கோயில்களில் யானைகள் வாங்க முடியாது. எனவே தற்போது இருக்கும் யானைகளை நோய்கள் அண்டாதவாறு முறையாக பாதுகாத்தால் மட்டுமே அவை நீண்ட ஆயுளுடன் இருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு யானைகள் என்றாலே அதிக பிரியம் ஏற்படும். எனவே, கோயில் கால்நடைகள் மற்றும் யானைகளை கண்காணிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Tags : Charities Department ,Kumaraguruparan , What happens in temples, the 3rd eye of the charity sector, gives fear to criminals,
× RELATED நெல்லை முத்துமாலை அம்மன் கோயில்...