×

கஞ்சா பதுக்கல் எதிரொலி: மதுரை மத்திய சிறையில் 4 மணி நேரம் சோதனை: உதவி கமிஷனர்கள் அதிரடி

மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் தோட்ட வேலை பணியில் ஈடுபட்ட ஒரு கைதி, மற்ற கைதிகளுக்கு கஞ்சா பொட்டலங்களை வெளிநபர்களிடம் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதன் எதிரொலியாக மதுரை மத்திய சிறை வளாகத்தில் விதிகளை மீறி போதைப் பொருட்கள், புகையிலை, சிகரெட், செல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மதுரை நகரை சேர்ந்த 3 உதவி கமிஷனர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை 4 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.  

மதுரை மத்திய சிறையில் உள்ள பெண் சிறைக்கைதிகள் பிரிவு உட்பட 1,300க்கும் மேற்பட்ட கைதிகளின் அறைகள் மற்றும் வளாகங்கள், உணவு தயாரிக்கும் பகுதிகள், கைதிகள் மற்றும் சிறை அலுவலர்கள் பயன்படுத்தப்படும் அறைகள், உணவுக்கூடங்கள்,  கழிவறைகள், தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடந்தது. மகளிர் சிறையில் மகளிர் போலீசார், தனித்தனியே சோதனையில் ஈடுபட்டனர். இதில் தடை செய்யப்பட்ட சில பொருட்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Tags : Madurai Central Jail , Ganja hoarding, Madurai Central Jail, Assistant Commissioners in action
× RELATED மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு பல் மருத்துவ முகாம்