×

நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பாஜவுக்கு எதிராக மறைமுக எதிர்ப்பலை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய ராகுல் அழைப்பு

புதுடெல்லி: ‘பாஜவுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பலை நிலவுகிறது. ஆனால் இது வெளியில் தெரியாமல் உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில், கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார்.

முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து யாத்திரை தற்போது டெல்லியை அடைந்துள்ளது. இந்த பயணம் தற்காலிக ஓய்வுக்குப் பின்னர் நாளை மறுதினம் மீண்டும் தொடங்குகிறது. டெல்லியை தொடர்ந்து அடுத்தகட்ட பயணம் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஒற்றுமை நடைபயணம் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. இதை தடுத்து பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் எந்தளவுக்கு முயற்சி செய்கிறதோ, அந்தளவுக்கு நடைபயணம் சிறப்பாகவே நடந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் செயல்படுதல் மற்றும் சிந்தித்தலில் புதிய வழியை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த யாத்திரையின் போது பாதுகாப்பு விதிகளை பலமுறை நான் மீறியதாக ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டு என் மீது வழக்கு போட முயற்சிக்கிறது. அதே போல கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை காரணம் காட்டி யாத்திரையை நிறுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த விஷயத்தில் அரசு அமைப்புகள் பாரபட்சமாக செயல்படுகின்றன. பாஜவின் சாலைப் பேரணிகள் மட்டும் கொரோனா விதிமுறைகளை மீறாதது எப்படி சாத்தியம்? நான் குண்டு துளைக்காத காரில் யாத்திரை செல்ல வேண்டுமென உள்துறை அமைச்சகம் கூறுகிறது. அதை எப்படி செய்ய முடியும்? நான் நடைபயணம் மேற்கொள்கிறேன். அதற்கு தகுந்த பாதுகாப்பைதானே அவர்கள் தர வேண்டும்? இதையும் ஒரு பிரச்னையாக்க மட்டும்தான் பார்க்கின்றனர். ஆனால் பாஜ என்ன செய்தாலும் இந்த நடைபயணத்தை நிறுத்த முடியாது. இதில் கொரோனா தொற்று நோயை பயன்படுத்தும் அற்ப அரசியலை அவர்கள் கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

வெறுப்புக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைப்பதே இந்த யாத்திரையின் நோக்கம். அன்பான இந்தியாவை விரும்பும் அனைவருக்கும் இந்த யாத்திரையின் கதவுகள் திறந்தே உள்ளன. எங்களுடன் இணையும் யாரையும் நாங்கள் தடுப்பதில்லை. அகிலேஷ், மாயாவதி மற்றும் பலரும் யாத்திரையில் பங்கேற்க விரும்புகிறார்கள். இது எங்களுக்கு வெற்றிகரமான யாத்திரை.

இப்போது நாட்டில் பாஜவுக்கு எதிராக மிகப்பெரிய மறைமுக எதிர்ப்பலை வீசுகிறது. இது வெளியில் தெரியாமல் இருக்கிறது. எனவே, எதிர்க்கட்சிகள் தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணையும் போது, பாஜ அவ்வளவு எளிதில் வெற்றியை பெற்று விட முடியாது. ஆனால் சில அரசியல் நிர்பந்தங்கள் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். அதை எல்லாம் ஒதுக்கி வைத்து எதிர்க்கட்சிகள் திறம்பட ஒன்றிணைய வேண்டும். மாற்று பார்வையுடன் மக்களை அணுக வேண்டும். அப்போது நமது வெற்றி நிச்சயமாகும். அனைத்து எதிர்கட்சிகள் மீதும் நாங்கள் மரியாதை கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

‘ராகுல் பிரதமர் வேட்பாளர்’ பீகார் முதல்வர் ஆதரவு
மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் அளித்த பேட்டியில், ‘‘2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகவும், பிரதமர் வேட்பாளராகவும் ராகுல் காந்தி இருப்பார். அவர் அதிகார அரசியல் செய்யவில்லை. மக்களுக்காக பணியாற்றி வருகிறார்’’ என்றார். அவரது இந்த பேச்சு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று அவர் கூறி உள்ளார். ஆனாலும், ராகுல் உயர் பதவிக்கு உரிமை கோருபவர் அல்ல என்றும் நிதிஷ் தெரிவித்துள்ளார்.

டிசர்ட் கண்ணை உறுத்துவது ஏன்?
நடைபயணத்தில் ராகுல் அணிந்த டிசர்ட் விலை உயர்ந்தது என சிலர் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டனர். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், ‘‘நான் டிசர்ட் அணிவது ஏன் அவர்களின் கண்ணை உறுத்துகிறது. இது எனக்கு வசதியாக இருக்கிறது. டெல்லியில் கடும் குளிர் வீசினாலும் டிசர்ட் அணிவது எனக்கு பிடித்திருக்கிறது. குளிரால் எனக்கு சளி எதுவும் பிடிக்கவில்லை. அதனால் ஸ்வெட்டர் எனக்கு தேவையில்லை’’ என கிண்டலடித்தார்.

ஆர்எஸ்எஸ் எனக்கு குரு
ராகுல் காந்தி மேலும் தனது பேட்டியில், ‘‘பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் இன்னும் ஆக்ரோஷமாக எங்களை எதிர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை மக்கள் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள உதவும். நான் அவர்களை எனது குருவாகக் கருதகிறேன். அவர்கள் எனக்கு வழிகாட்டுகிறார்கள், அதாவது என்ன செய்யக் கூடாது என எனக்கு பயிற்சி தருகிறார்கள். அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் உண்மையுடன் போராட முடியாது” என்றார்.

* இந்தியா வாடகை வாங்கும் தேசமாக இல்லாமல் உற்பத்தி செய்யும் தேசமாக இருக்க வேண்டுமென ராகுல் கூறினார்.
* மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சிவில் சர்வீஸ் மற்றும் சட்டம் ஆகிய துறைகளுக்கு அப்பால் சிந்திக்கும் கற்பனை சிறகுகளை தரக்கூடிய வகையில் கல்விக் கொள்கை இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
* அதிக பொருளாதார சமத்துவம் இருக்க வேண்டுமென கூறிய ராகுல், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு தருவதாகவும் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினார். அதே சமயம், தொழில் துறையை 2, 3 தொழிலதிபர்கள் கட்டுப்படுத்துவதை எதிர்ப்பதாக கூறினார்.

Tags : Rahul ,united ,baja , Opposition parties, Rahul calls for indirect protest against BJP across the country
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்