×

மேட்டுப்பாளையம் அருகே நீண்ட நாட்களுக்கு பிறகு காட்டு யானை உலா

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒற்றை காட்டு யானை உலா வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சமயபுரம் கிராமம் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், அவ்வப்போது காட்டு யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சமயபுரம் வனத்துறை குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகுபலி என்று அழைக்கப்பட்டு வந்த ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதன் பின்னர் பாகுபலியுடன் மற்றுமொரு யானையும் இணைந்து சமயபுரம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. வனத்துறையினரின் தொடர் கண்காணிப்பிற்கு பின்னர் அந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தாசம்பாளையம், கிட்டாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானை ஒன்று மீண்டும் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வந்தது.
இந்நிலையில், நேற்று நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் பயிர்களை சேதப்படுத்திய யானை சமயபுரம் பகுதியின் ஒருபுறம் இருந்து சாலையை கடந்து மற்றொருபுறம் சென்றது.

வனத்துறையினர் யானை விரட்டும் வாகனத்தை அப்பகுதியில் தயாராக நிறுத்தி வைத்திருந்ததை கண்ட ஒற்றை யானை ஆக்ரோஷத்துடன் சாலையை கடந்து சென்றது. இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நீண்ட நாட்களாக சமயபுரம் பகுதிக்கு வராமல் இருந்த யானைகள் மீண்டும் ஊருக்குள் வருவதால், நாங்கள் அச்சமடைந்துள்ளோம். வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mettupalayam , A wild elephant walk after a long day near Mettupalayam
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது