×

புளியங்குடியில் கோவில் வளாகத்தை `பார்’ஆக மாற்றிய குடிமகன்கள்: பக்தர்கள் வேதனை

புளியங்குடி: புளியங்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆவணி அம்மன் கோவில் முன்பாக குடிமகன்கள் மது அருந்துவதோடு குப்பைகள், கழிவுகள் சேர்வதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். புளியங்குடி வடக்கு ரத வீதியில் நாராயணப்பேரி குளம் அருகில் அமைந்துள்ளது ஆவணி அம்மன் கோவில்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில்  செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புளியங்குடி மற்றும்  சுற்று வட்டாரத்தில் இருந்து பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை வழிபடுவார்கள். தற்போது கழிவு நீர்  கோவில் முன்பாக குளத்தில் கலப்பதால் அப்பகுதி முழுவதும் அசுத்தமாக குப்பை மேடாக மாறி வருகிறது. இதோடு பகல்  வேளைகளிலே  குடிமகன்களும் கூட்டம் கூட்டமாக வந்து மது அருந்துவதால் தற்போது பெண்கள் அங்கு நடமாடவே முடியாத நிலையில் பயந்து கொண்டே கோவிலுக்கு செல்கின்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் குடியிருப்புகள் இருந்தும் குடிமகன்கள் யாரையும் சட்டை செய்வதில்லை.

இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கூறும்போது ஊரின் மேற்கு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் குளத்தில் கலப்பதினால் கோவில் வளாகம், குளம் அசுத்த மாகி விடுகிறது கழிவு நீரை வேறு பகுதிக்கு திருப்பி விடுவதன் மூலம் அந்த பகுதியை குப்பைகள் சேராமல்  நன்கு பராமரித்து விடலாம். மாலை, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வருவதன் மூலம் குடிமகன்களையும் இங்கு வரவிடாமல் தடுத்துவிடலாம், இதன் மூலம் அச்சமின்றி பெண்கள் கோவிலுக்கு வரவமுடியும்’’ என்றனர்.

Tags : Buliangudi , Citizens turn temple complex into 'Bar' in Buliangudi: Devotees are in agony
× RELATED புளியங்குடியில் கிணற்றில் தவறிவிழுந்து மூதாட்டி பரிதாப பலி