ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா; மோகினி அலங்காரத்தில் நாளை நம்பெருமாள் காட்சி: ஜன. 2ல் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 9ம் நாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில், முத்துகலிங்கு ஆபரணம், முத்தங்கி, முத்து அபயஹஸ்தம், முத்து திருவடி, முத்து ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு பகல்பத்து மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

   

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்) நாளை நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் காட்சியளிக்கிறார். அங்கு பொதுஜன சேவை முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு ஆரியபட்டாள் வாயில் வந்தடைகிறார்.

பின்னர் இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபம் சேருகிறார்.  8.30 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்திலிருந்து புறப்பாடாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார். நாளை மாலை 4.30 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதி இல்லை.

நாளை மறுநாள் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல்(பரமபதவாசல்) திறப்பு நடைபெறுகிறது. அதிகாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் பரமபதவாசலை கடந்து, திருமாமணி ஆஸ்தான மண்படத்தில் எழுந்தருள்கிறார். 2ம் தேதி முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. 11ம் தேதி தீர்த்தவாரியும், 12ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடக்கிறது.

Related Stories: