×

கடனை திருப்பித் தராத வாலிபரின் கழுத்தை அறுத்துக் கொலை: அதிமுக பிரமுகர் கைது

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்(எ)மீனாட்சி சுந்தர்(32). இவர் பர்மா காலனியை சேர்ந்த வடைகடை வைத்து வியாபாரம் நடத்தி வரும் அதிமுக பிரமுகர் ராமன்(62) என்பவரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் ராமன் அந்த கடனை திரும்ப கேட்டபோது, சுந்தர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ராமனின் கடைக்கு அருகிலேயே, சுந்தர் இரவு நேரத்தில் `சிக்கன் 65’ விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ராமன், சுந்தரை தனியாக அழைத்துக்கொண்டு பாலாஜி நகர் கவுற்று வாய்க்கால் பாலம் பகுதிக்கு சென்றார். கடனை திரும்ப தராததால் ஆத்திரத்தில் இருந்த ராமன், சுந்தருக்கு அதிக அளவில் மது வாங்கி கொடுத்தார். பின்னர் போதை அதிகமாகியதும் சுந்தரின் கை, கால்களை கயிற்றால் கட்டி, ஏற்கனவே புதிதாக வாங்கி வைத்திருந்த கத்தியால் சுந்தரின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் துடி, துடித்து அந்த இடத்திலேயே பரிபதாக இறந்தார்.

அதன் பின்னர் ராமன் திருவெறும்பூர் போலீசில் சரண் அடைந்து சுந்தரை கொலை செய்ததை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.

அப்போது போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: சுந்தரை நான் மாப்பிள்ளை என்றும், அவர் என்னை மாமா என்றும் உறவு முறை சொல்லி பேசுவோம். ஆனால் அவர் வாங்கிய கடனை நீண்ட காலமாகியும் தரவில்லை. இதனால் நேற்று அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து வாய்க்கால் பாலம் அருகே அழைத்து சென்று  மது குடிக்க வைத்தேன். அப்போது நீ கடனை தராததால் உன்னை கட்டிப்போட்டுவிட்டு செல்லவா அல்லது கழுத்தை அறுத்து போட்டு செல்லவா என அவரிடமே கேட்டேன். அவர் கட்டிப்போடும்படி சொன்னார். இதை சாதகமாக்கி உடனே சுந்தரின் கை, கால்களை கட்டினேன். பின்னர் அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு சரணடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


Tags : ADMK , ADMK leader arrested for slitting throat of youth who did not repay loan
× RELATED யுகாதி தினம்: தலைவர்கள் வாழ்த்து