சென்னையில் குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்க சிறப்பு சோதனைகள்: காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் கொலை முயற்சி, 2க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள், பணம் கேட்டு மிரட்டிய குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 811 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து அறிவுரை வழங்கப்பட்டது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள், கொலை முயற்சி, 2க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டும் குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (30.12.2022) ஒரு நாள் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டனர்.

இச்சோதனையில், 682 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே 2,556 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் 2 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெற்றும், 2 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெற ஆயத்த பணிகள் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த 4 போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2 தலைமறைவு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே 422 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல நேற்றைய சிறப்பு சோதனையில் கொலை முயற்சி வழக்கு அல்லது 2க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 129 குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்தும், விசாரணை செய்தும், குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே, இவ்வழக்குகளில் தொடர்புடைய 148 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலும், 602 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற சோதனையில், 1 குற்றவாளியிடமிருந்து நன்னடத்தை பிணை பத்திரம் பெற ஆயத்த பணிகள் மேற்கொண்டும், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 1 தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே நேற்று நடைபெற்ற சிறப்பு சோதனையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள், கொலை முயற்சி, 2க்கும் மேற்பட்ட அடிதடி மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 811 குற்றவாளிகள் நேரில் கண்காணித்தும், போக்கிரி தனத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட் 2 குற்றவாளிகள் மற்றும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 1 குற்றவாளி என மொத்தம் 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், 2 குற்றவாளிகளிடம் நண்ணடத்தை பிணை ஆவணம் பெற்றும், 3 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்கள் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

Related Stories: