×

2021, 2022ம் ஆண்டுகளில் அணையில் 142 தண்ணீரை தேக்கி பெரியாறு அணையின் பலத்தை மீண்டும் நிரூபித்த தமிழக அரசு: கேரளாவின் பொய் பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி; தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

கூடலூர்: பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை கடக்கும்போதெல்லாம், கேரளாவில் அணையின் பலம் குறித்து பொய்யுரை பரப்பப்படுகிறது. இந்த பொய் பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021, 2022ம் ஆண்டுகளில் அணையில் 142 தண்ணீர் தேக்கி அணையின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் கடந்த 2014 மே 7ல் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் 2014, 2015 மற்றும் 2018ல் அணையின் நீர்மட்டம் 142 அடி தேக்கப்பட்டது. 2019, 2020ல் பருவமழை ஏமாற்றியதால் 142 அடி தண்ணீர் தேக்க முடியவில்லை.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த 2021 அக்.29ல் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்த்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் 136 அடியானவுடன் கேரளாவில் வக்கீல் ரசல்ஜோய் தலைமையிலான சேவ் கேரளா பிரிகேட் அமைப்பு, கேரள தமிழர்களின் ஆதரவில் ஜெயித்த இடுக்கி எம்பி டீன்குரியகோஸ், முன்னாள் எம்பி ஜோய்ஸ் ஜோர்ஜ், பீர்மேடு எம்எல்ஏ வாழூர் சோமன், முன்னாள் அமைச்சர் பி.ஜே ஜோசப், மலையாள திரைப்பட நடிகர் பிரிதிவிராஜ் உட்பட பலர் பெரியாறு அணையை இடிக்க வேண்டும், புதிய அணை, புதிய ஒப்பந்தம் என உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.

ஆனால், முதல்வர் மு.கஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெரியாறு அணையில் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்காமல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக நிலைநிறுத்துவதில் உறுதியாக இருந்தது. இதையடுத்து 2021 நவ.30ல் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. அன்று முதல் ஒரு மாதக் காலத்தில் 12 நாட்கள் 142 அடியாகவும், மீதி 18 நாட்கள் 141.50 அடிக்கு குறையாமலும் தண்ணீர் நிலை நிறுத்தி, பெரியாறு அணை இன்னமும் பலமாகத்தான் உள்ளது என்பதை உறுதி செய்ததோடு, திமுக ஆட்சியில் பெரியாறு அணையில் தமிழக உரிமையை நிலைநாட்டினர் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள். தமிழக அரசின் நடவடிக்கையினால் அதிர்ந்துபோன கேரள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் 2022 பிறந்தது முதல் மீண்டும் பெரியாறு அணை குறித்த பொய்யுரைகளையும், தமிழக அதிகாரிகளுக்கு இடையறுகளையும் செய்யத் தொடங்கினர்.

* மராமத்து பொருட்களுக்கு அனுமதி மறுப்பு
பெரியாறு அணை நீர்மட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து 142 அடியாக நிலை நிறுத்தியதால், பேபி அணையின் கீழ் பகுதியில் கசிவு அதிகரித்துள்ளது, பேபி அணை பழுதடைந்த நிலையில் இருப்பதால்தான் தமிழகம் பேபி அணையை பலப்படுத்த கேரளாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டை கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் கொண்டு வந்தனர்.  அதுபோல், 2022 மார்ச்சில், தேக்கடியில் உள்ள பெரியாறு அணை உபகோட்ட அலுவலகம் மற்றும் பணியாளர் குடியிருப்பில், உடைந்த நிலையில் உள்ள ஆஸ்பெட்டாஸ் மற்றும் குடிநீர் தொட்டி, பைப்புகள் சேதமடைந்ததால், அதை மாற்றுவதற்காக ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள், குடிநீர் பைப்புகள் கொண்டு சென்ற வாகனத்தை தேக்கடி நுழைவுப்பகுதியிலுள்ள கேரள வனத்துறை சோதனைச்சாவடியில் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி கேரள வனத்துறையினர் வாகனத்தை விட மறுத்தனர். இருமாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் 4 நாட்களுக்குப்பின் அனுமதியளித்தனர்.
 
* ‘‘புதிய அணை’’ கேரள அமைச்சரின் முகநூல் பதிவு
பெரியாறு அணைக்கு 1300 அடிக்கு கீழே புதிய அணைக்கான இடம் கண்டறியப்பட்டு திட்ட மதிப்பீட்டு அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது, என ஜூலை 21ல் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டினின் தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்து புதுப்பிரச்சனையை கிளப்பினார். 2012 ஜூலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய உடன் வழக்கறிஞர் ரசல்ஜோயின் அமைப்பான கேரள சேவ் பிரிகேட் அமைப்பு, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக மீண்டும் விஷமப் பிரச்சாரம் தொடங்கினார்கள். இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று பொய் பரப்புரை செய்து, 10 லட்சம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்ப கையெழுத்து இயக்கம் நடத்தினர். மேலும், கேரளா அங்கமாலி நகரத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில், அங்கு பயிலும் மாணவிகளுக்கு முல்லைப் பெரியாறு அணை குறித்த நடத்திய செமினார் வகுப்பில், அணை குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததோடு, பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட இளைஞர்கள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழகத்திற்கு எதிராக பகைமையை தூண்டினர்.

* பொய்பரப்புரையின் உச்சகட்டமாக ஆவணப்படம்
பெரியாறு அணையின் ஆயுள் 50 ஆண்டுகள் மட்டுமே, அணைக்கு 142 அடி தண்ணீரை தாங்கக்கூடிய சக்தி இல்லை. அணை உடைந்தால் கேரளாவில் 5 மாவட்டங்கள் அழியும், 50 லட்சம் மக்கள் இறப்பார்கள் என கேரளா முழுவதும் பொய் பரப்புரையும், போராட்டங்களும் நடத்தியவர்கள் கடந்த நவ.14ல் ‘‘பெரியாறு’’ தி பிளீடிங் ரிவர் என்ற பெயரில் 17.21 நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். கேரளாவின் இவ்வளவு பொய்பரப்புரைக்கும் பதில்கூறும் விதமாக தமிழக அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவதில் குறியாக இருந்தது. இந்நிலையில் கடந்த டிச. 27 ல் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தி பெரியாறு அணை இன்னமும் பலமாகத்தான் உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. 


Tags : Government of Tamil Nadu ,Bhariyaru dam ,Kerla ,Theni ,Madurai , In 2021 and 2022, the Tamil Nadu government once again proved the strength of Periyar dam by storing 142 water in the dam: an end to Kerala's false propaganda; People of 5 districts including Theni and Madurai are happy
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...