×

காரியாபட்டி அருகே நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டத்தால் அரசகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது: பொங்கல் வைத்து கொண்டாட்டம்; திமுக அரசுக்கு கிராம மக்கள் நன்றி

காரியாபட்டி: காரியாபட்டி அருகே, நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டம் மூலம், 1981ம் ஆண்டுக்கு பிறகு, இந்தாண்டு அரசகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்ததால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து திமுக அரசுக்கு நன்றி தெரிவித்து, பொங்கல் வைத்து கொண்டாடினர். காரியாபட்டி பகுதியில் நிலையூர்-கம்பிக்குடி திட்டம் மூலம் நிலையூர் முதல் கம்பிக்குடி வரை புதிய கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கண்மாய்களில் தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். இந்த கால்வாய்க்கு வைகை அணை நீரே, முக்கிய நீராதாரமாகும். ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழையால், வைகை அணை நிரம்பி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நீரானது ஏற்கனவே உள்ள கண்மாய்களில் நிரப்பப்படும். மீதமுள்ள உபரிநீர் நிலையூர்-கம்பிக்குடி கால்வாயில் திறந்து விடப்படும்.

விவசாயிகள் கோரிக்கை: இந்நிலையில், நிலையூர்-கம்பிக்குடி உபரிநீர் கால்வாயை, முறையான பாசனக் கால்வாயாக மாற்றினால் மட்டுமே காரியாபட்டி பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பும். அதன்மூலம் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் ஆண்டுக்கு 120 நாட்கள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாய மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

* தண்ணீர் திறக்க அமைச்சர் நடவடிக்கை
காரியாபட்டி பகுதியில் நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டம் செயல்படுத்தபடாமல் இருந்தது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அன்றைய எம்எல்ஏவும், தற்போதைய தொழில்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆலோசனைப்படி, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு இந்த திட்டம் கொண்டு செல்லப்பபட்டது. இதையடுத்து திமுக தேர்தல் அறிக்கையில் நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டடிருந்தது. காரியாபட்டி பகுதியில் உள்ள ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங்குளம், கம்பிக்குடி, பாப்பணம், அல்லாளப்பேரி மற்றும் பல்வேறு கிராமங்களில் நெல், வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை பல ஏக்கரில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நிலையூர்-கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து காரியாபட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கண்ணன், ஒன்றியக் கவுன்சிலர்கள் சிதம்பரபாரதி, சேகர், கிராமத்து களப்பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையடுத்து சென்ற ஆண்டு தண்ணீர் வந்து, இந்த பகுதி கண்மாய்கள் முழுமையாக நிரம்பியது. இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டு மாங்குளம், அரசகுளம், குரண்டி, ஆவியூர், கம்பிக்குடி ஆகிய கண்மாய்கள் நிரம்பியுள்ளன. தற்போது கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

மறுகால் பாய்ந்த அரசகுளம் கண்மாய்: அரசகுளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் சுமார் 1981ம் ஆண்டு கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அதன் பின் 41 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அரசகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் சந்தோஷம் அடைந்தனர். இதை கொண்டாடும் விதமாக அரசகுளம் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து, கிடாய் வெட்டி விருந்து ஏற்பாடு செய்தனர். மறுகால் பாய்ந்ததையொட்டி காரியாபட்டி திமுக ஒன்றியச் செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சேகர், சிதம்பர பாரதி, ஆகியோர் பூ தூவி வழிபட்டனர். இது குறித்து ஒன்றியக் கவுன்சிலர் சேகர் கூறியதாவது: முள்ளிப் பள்ளத்திலிருந்து பெருங்குடி வரை நிலையூர்-கம்பிக்குடி கால்வாயை அகலப்படுத்த, ரூ.80 கோடி மதிப்பீட்டில் திட்டம் வரையறுக்கப்பட்டு, அமைச்சர் தங்கம் தென்னரசுவின் முயற்சியால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டம் முழுமை பெற, அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்’ என்றார்.

Tags : Arasa Kulam ,Thanaur ,Kariyapatti ,DMK Govt , Arasa Kulam overflows to overflowing due to Thanaur-Kambikudi canal project near Kariyapatti: Pongal celebrations; Villagers are thankful to DMK Govt
× RELATED காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி...