×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்த ஓராண்டில் பயோ டீசல் தயாரிக்க 73 ஆயிரம் லிட்டர் பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்பு

* ரத்த அழுத்தம், இதயம் பாதிப்பு வராமல் தடுக்கப்படுகிறது
* நோயற்ற வாழ்விற்கு உகந்ததாக அமைய அரசு நடவடிக்கை

ஆம்பூர்: ரூகோ முறையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் 73 ஆயிரம் லிட்டர் சேகரித்து பயோ டீசல் தயாரிப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் தயாரிப்பதில் எண்ணெய் பொருட்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக இன்றைய சூழலில் மாறி விட்டது. எண்ணெய் இல்லாத உணவு குப்பையிலே என கூறும் அளவிற்கு இன்றைய உணவில் எண்ணெய் பொருட்களின் தாக்கம் உள்ளது. ஆதிகாலத்தில் மனிதன் உணவை பச்சையாக உண்டும், பின்னர் அவற்றை தீயில் சுட்டும் உண்டான். பின்னர், நாகரீக வளர்ச்சி காரணமாக அவற்றை வேகவைத்து சாப்பிட பழகினான்.

இதை தொடர்ந்து உணவின் சுவையை கூட்டும் விதமாக விலங்கு கொழுப்பு, தாவர கொழுப்பு ஆகியவற்றை பயன்படுத்தி சமைத்த போது அதன் சுவை அதிகரித்து இருப்பதை கண்டான். பின்னர், பல்வேறு நாடுகளில் இந்த வகை கொழுப்புகளை பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்கும்முறைகளை கண்டறிந்தனர். எண்ணெய் வித்துக்களான வேர்க்கடலை, ஆமணக்கு, எள், தேங்காய் ஆகியவற்றை பயன்படுத்தி செக்கு பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்கும் முறை பற்றி சங்க கால தமிழ் நூல்களில் காணப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கபட்ட எண்ணெய் வகைகளை மதுரை, தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் கடல் வாணிபத்தின் மூலம் தெற்காசிய நாடுகளூக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

இதேபோல் மலேசியா, பர்மா, உக்ரைன், ரஷ்யா, சீனா, உள்ளிட்ட நாடுகளில் தயாரான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய இந்திய சந்தைக்கு வர துவங்கின. இவ்வாறு எண்ணெய் இந்திய உணவு பொருட்களில் ஆக்கிரமிக்க துவங்கியது. அப்பளம் பொரிக்க துவங்கி சாம்பார், கூட்டு, பொறியல், இனிப்பு வகைகள், கார வகைகள் ஆகியவற்றிலிருந்து மேற்கத்திய, சைனீஸ் உணவு வகைகள் வரை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை எண்ணெய் கலப்படம் அதிகரித்து வந்த நிலையில் உணவு பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தபட்டு அதற்கான வழிமுறைகளின் படி தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் இன்று பாக்கெட்டுகள், கேன்களில் உணவுக்கான சமையல் எண்ணெய்யானது, மூலப்பொருட்கள், சில்லறை விலை, தயாரிப்பாளர், தயாரிப்பு தேதி ஆகிய விவரங்களுடன் விற்கப்படுகிறது. இன்றைய நிலையில் இந்தியாவில் எண்ணெய் சந்தை மதிப்பானது பல ஆயிரம் கோடிகளை தாண்டி நிற்கிறது. இதில் சிலர் கலப்பட எண்ணெய் தயாரித்து மோசடி செய்து லாபமீட்டும் நிலையும் உள்ளது. கலப்பட எண்ணெய் என்பது ஒரு தரமான எண்ணெயில் வேறு ஒரு தரமற்ற எண்ணெயை ஒரு சில விகிதத்தில் கலந்து முழு லாப நோக்கில் செயல்படும் நிலையாகும்.

இதனால் இதை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய், குடல் புற்று நோய், குடல் அழற்சி, வயிற்றுபோக்கு ஆகியவை ஏற்பட கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கலப்பட எண்ணெயில் உள்ள எண்ணெய்களில் உருகும் வெப்பநிலை ஒரேமாதிரி இருக்காது. இதனால் ஓவ்வொரு எண்ணெயும் ஒவ்வொரு வெப்பநிலையில் தனது உருகுநிலையை அடையும். இதன் காரணாக தயாரிக்கபடும் உணவில் அதிக வெப்பநிலை கொண்ட எண்ணெய் படிந்து உடல் நோய்களுக்கு வழி வகுக்கிறது. ஒரே பிராண்ட் எண்ணையையோ அல்லது ஒரே விதமாக எண்ணெயை தொடர்ந்து உபயோகப்படுத்தாமல் எண்ணெய்களை அவ்வப்போது மாற்றி வரும் நிலையில் உடலில் தொடர்ந்து படியும் ஒருவித கொழுப்பு உள்ளிட்டவற்றின் அளவை குறைக்க இயலும் என ஊட்டசத்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் கடுகு எண்ணெய், எள் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், நெய் ஆகிய எண்ணெய் வகைகள் உணவு தயாரிப்பிற்காக பயன்படுத்த படுகின்றன. மேற்கத்திய நாடுகளில் சூரியகாந்தி எண்ணெய்யும், தெற்காசிய நாடுகளில் பாமாயில் அதிக அளவில் உபயோகபடுத்தப்படுகிறது. இன்றைய சூழலில் உடல் பருமன் குறைக்க உடல் நல வல்லுனர்கள், மருத்துவ ஆலோசகர்கள் எண்ணெய்யை குறைத்தோ அல்லது அவை இல்லாத உணவை உட்கொள்ள அறிவுறுத்துகின்றனர். அவர்கள் அளிக்கும் டயட் லிஸ்டில் எண்ணெய் இல்லாத உணவே அதிகளவில் இருக்கிறது. மேலும், நவீனயுகத்தில் வீடு தேடி உணவு வரும் நிலை உருவாகி உள்ளது.

அந்த உணவகங்களில் எந்த வித எண்ணெயை பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றனர் என்பதை அந்த நிறுவனங்களும் தெரிவிப்பதில்லை. உணவகம், ஸ்வீட் கடைகள், பேக்கரி ஆகிய இடங்களில் உணவை தயாரிக்க சமையல் எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு இல்லாத நிலையில் நுகர்வோருக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில் தயாரிக்கப்படும் இந்த வித உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரிய விதிகளை பின்பற்ற உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து ஒரே எண்ணெயில் மீண்டும் மீண்டும் சூடு செய்து உணவு பொருட்கள் தயாரிக்க கூடாது. அவ்வாறு செய்யப்படும் போது அதிக அளவில் அவற்றில் டோட்டல் போலார் காம்பவுண்ட்ஸ் எனப்படும் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இவ்வாறு தயாரிக்கபடும் உணவுகளை உண்பவருக்கு உயர் ரத்த அழுத்தம், இதய அடைப்பு, மூளை பாதிப்பு, கணைய செயலிழப்பு ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டே ஒருமுறை மட்டுமே சமையல் எண்ணெய்யை பயன்படுத்த உணவு, ஸ்வீட், காரம், பேக்கரி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அனுமதிக்கிறது.

மேலும், இவ்வாறாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தபட்டு மீதமாகும் சமையல் எண்ணெயை ரூகோ (சமையல் எண்ணெய் மறுசுழற்சி) திட்டத்தின் கீழ் சேகரிக்கபடுகிறது. ரூகோ திட்டத்தின்கீழ் இந்த வகை உணவகங்களில் தயாரித்து மீதமாகும் சமையல் எண்ணெயை பல்வேறு பதிவு பெற்ற நிறுவனங்கள் சேகரிக்கின்றன. அந்தந்த உணவகங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரும் இந்த நிறுவனங்கள் அந்த உணவு தயாரிப்பு நிறுவனங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய்யை சேகரித்து கொள்கின்றனர். தாங்கள் சேகரித்து கொள்ளும் அளவிலான அந்த எண்ணெய்க்கு லிட்டருக்கு ரூ.35 வரை வழங்கபடுவதாக உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஒரு முறை பயன்படுத்த பட்ட எண்ணெயை எடுத்து செல்லும் நிறுவனங்கள் அவற்றை பல்வேறு நிலைகளூக்கு பின்னர் பயோடீசலாக மாற்றுகின்றன.

இதன் காரணமாக உடல் நல கோளாறுகள் தவிர்க்கப்படுவதுடன் எண்ணெய் வீணாக கொட்டுவதை தவிர்த்து மறுசுழற்சி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சென்னை, கோயமுத்தூர், வாலாஜா பேட்டை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் பயோடீசல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வித சமையல் எண்ணெய்யை விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் மாதத்திற்கு ஒருமுறை 3 ஆயிரம் லிட்டர் வரையிலான உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை பெற்று செல்கின்றனர். ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 3 மாவட்டங்களில் 36 ஆயிரம் லிட்டர் எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரையில் 37 ஆயிரம் லிட்டர் என்று மொத்தம் 73 ஆயிரம் லிட்டர் பயன்படுத்திய சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்ற சென்ைன, ஆந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு விதிமுறைகள் நுகர்வோரின் நலன் காக்கவே என்றாலும் நாளைய நோயற்ற வாழ்விற்கு உகந்ததாக அமையவே அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு முழு கவனத்துடன் செயலாற்றி வருகிறது. எண்ணெய் என்பது தவிர்க்க இயலாதது என்றாலும் அளவுடனும், அவசியத்திற்காகவும் பயன்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும் என்பது மறுப்பதற்கில்லை.

* கடந்த ஆண்டு 46 ஆயிரம் லிட்டர் சேகரிப்பு
பாக்கெட் எண்ணெய்க்கு மாறும் சாலையோர கடைகள் பெரிய, நடுத்தர உணவு தயாரிப்பு நிறுவனங்களான உணவகம், துரித உணவகம், சுவீட், பேக்கரி கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை சாலையோர கடைகள் உள்ளிட்ட சிறு உணவு தயாரிப்போர் வாங்கி செல்வது நடைமுறையில் இருந்தது. தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறையினரிடன் நடவடிக்கையால் தற்போது இந்த நிறுவனங்கள் தங்களது மீதமாகும் எண்ணெயை பயோ டீசல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்கின்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த ஆண்டு மட்டும் 46 ஆயிரம் லிட்டர் எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோ டீசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறு உணவு தயாரிப்போருக்கு விற்பதை விட கூடுதல் விலை கிடைப்பதால் தற்போது இரண்டாம் விற்பனையாக சிறு உணவு தயாரிப்பு கடைகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் சாலையோர உணவு தயாரிப்பு கடைகள் புதிய பாக்கெட் எண்ணெய்களை வாங்க துவங்கி உள்ளதாக உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கும் உரிய சுகாதாரமான எண்ணெய்யில் தயாரித்த உணவுகள் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

* மறுசுழற்சியால் இயற்கைசூழல் பாதுகாப்பு
எண்ணெய் மறுசுழற்சி முறையால் பயன்படுத்தபட்ட எண்ணெய் வீணாக கொட்டபடுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் சாக்கடை உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் துர்நாற்றம் தவிர்க்கபடுவதுடன் உரிய விலை கொடுத்தும் எண்ணெய் பெறப்படுகிறது. இதனால் மறுசுழற்சி செய்து வாகன எரிபொருளிற்கான பயோடீசல் தயாரிக்கபடுகிறது. இதன் காரணமாக சுற்றுசூழல், பொருளாதாரம், மக்கள் சுகாதாரம் பாதுகாப்பில் ஒரு மைல்கல் செயலாக இது மாறி வருகிறது. எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை அரசு உணவு தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஏற்படுத்தி முழுமையாக இந்த வித சமையல் எண்ணெய் திரும்ப பெறுதலை ஊக்குவிக்க வேண்டுமென சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பயோடீசலை அதிகம் பயன்படுத்தும் இந்தியன் ரயில்வே இந்தியன் ரயில்வே பயோடீசலை அதிக அளவில் பயன்படுத்தும் நிறுவனமாக திகழ்கிறது. இந்தியன் ரயில்வேயில் உள்ள 4 ஆயிரம் டீசல் லோகோமோடிவ் என்ற இன்ஜின்களில் சுமார் 2 பில்லியன் லிட்டர் டீசல் ஆண்டொன்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.16 ஆயிரம் கோடி அளவிற்கு செலவாகிறது. தற்போது பயோ டீசல் பயன்பாடு ரயில்வேயில் துவங்கி நடந்து வருவதால் சுமார் 5 சதவீதம் பயோடீசல் பயன்பாடு அதிகரித்து வருவது குறிப்பிட்டதக்கது.

* ஒரே எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் அபராதம்
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யில் உணவு தயாரிப்போர், மீண்டும் மீண்டும் சூடு செய்து பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது சோதனையில் தெரியவந்தால் அவர்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.

* 100 சதவீதம் ருகோ திட்டம் செயல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் ருகோ திட்டத்தின் கீழ் பயன்படுத்தி சமையல் எண்ணெய் பயோ டீசல் தயாரிக்க, தனியார் நிறுவனம் மூலம் சேகரித்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, பயோ டீசல் தயாரிக்க 25 சதவீதம் ஓட்டல்கள், ஸ்வீட் ஸ்டால்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களிடமிருந்து தான் பெறப்படுகிறது. மற்ற 75 சதவீதம் உணவு நிறுவனங்கள் இதனை கடைபிடிக்கிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இத்திட்டத்தினை 100 சதவீதம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Vellore ,Tirupattur ,Ranipet ,Tiruvannamalai , Collection of 73 thousand liters of used cooking oil for biodiesel production in Vellore, Tirupattur, Ranipet, Tiruvannamalai districts.
× RELATED ஒரே நாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக்...