சென்னை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆர்.என்.ரவி (தமிழக கவர்னர்): பிரதமரின் தாயார் மறைவு மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா கவர்னர்): அன்னை தீபம் அணைந்து விட்டது. எதையும் தாங்கும் எப்போதும் உள்ள உறுதியை இப்போதும் நம் இறைவன் பிரதமருக்கு அருளட்டும்.
எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): பிரதமரின் தாயார் காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். பிரதமருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
ஓ.பன்னீர்செல்வம் (எதிர்க்கட்சி துணைத்தலைவர்): மிகுந்த வருத்தமளிக்கிறது. பிரதமருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
ராமதாஸ் (பாமக): பிரதமரின் வாழ்வில் அவரது தாயார் எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதை நான் அறிவேன். தாயை இழந்து வாடும் பிரதமருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
வைகோ (மதிமுக): மோடியின் அன்பு தாயார் நூறாண்டுகள் வாழ்ந்து, மறைந்திருக்கிறார். இந்த செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): நிறைவாழ்வு கண்ட ஹீராபென் அம்மையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். பிரதமர் மோடி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜி.கே.வாசன் (தமாகா): மோடியின் உயர்விற்கும், வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர். அம்மையாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.
அன்புமணி (பாமக): பிரதமர் மோடியின் வாழ்வில் அவரது தாயாரின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. பிரதமருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
அண்ணாமலை (பாஜ): பிரதமர் மோடிக்கு தமிழக பாஜ சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
டிடிவி.தினகரன் (அமமுக): அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
நடிகர் ரஜினிகாந்த்: மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்களே, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): மோடியின் தாயார் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான்.
ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி): 100 வயதில் அடியெடுத்து வைத்த அவர், தனது வாழ்வின் இறுதிகாலம் வரை எவர் உதவியுமின்றி தானே நடந்து வந்தார். அவரது மறைவு மோடிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி): தாயாரை பிரிந்து வாடும் பிரதமர் மோடிக்கும், உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவிக்கிறேன். அவரது ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி): பிரதமர் தனது, தாயார் மீது கொண்டிருந்த எல்லையற்ற அன்பையும், பற்றையும் அனைவரும் அறிவார்கள். ஈடு செய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தி மறைந்திருக்கும் அன்பு தாயின் பிரிவால் துயருற்றிருக்கும் மோடிக்கும் உற்றார், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
