×

‘மகாராஜா’ பீலே மறைவுக்கு கால்பந்து உலகம் கண்ணீர் அஞ்சலி

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் பீலே (82). உலக கோப்பையை 3 முறை வென்ற (1958, 1962, 1970) ஒரே வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர். கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த பீலே, கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். குடல் பகுதியில் இருந்த கட்டி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, கீமோதெரபி அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் புற்றுநோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து வந்த நிலையில், சா பாலோவில் நேற்று முன் தினம் இரவு பீலே காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரேசில் முழுவதும் 3 நாட்களுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பிரேசிலின் முதன்மை அடையாளமாக கார்வாடோ  மலை மீது அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட ஏசு சிலை, தேசியக் கொடியின் பச்சை, மஞ்சள் வண்ணத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளது. பீலேவின் சொந்த ஊரான சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்படும் பீலேவின் உடலுக்கு நாளை, நாளை மறுநாள் லட்சக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள். பின்னர் நடைபெறும் இறுதிச் சடங்கில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள், கால்பந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் பீலே
பீலே 1977, 2015 என இரண்டு முறை இந்தியா வந்துள்ளார். முதல் முறையாக வந்தபோது கொல்கத்தாவின் பிரபல கால்பந்து கிளப் மோகன் பகான் அணியுடன், அமெரிக்காவின் காஸ்மோஸ் கிளப் அணி மோதிய காட்சிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த அந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்ததால், அந்த போட்டியில் விளையாட பீலே மிகுந்த தயக்கம் காட்டினார். அவர் விளையாடாவிட்டால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது, மிகப் பெரிய பிரச்னை ஏற்படும் என நிர்வாகிகள் வற்புறுத்திய பிறகே பீலே களமிறங்கினார். எனினும், அவர் உள்பட காஸ்மோஸ் வீரர்கள் தங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் சோம்பலாக செயல்பட்டதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக அன்றைய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

38 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015ல் 2வது முறையாக கொல்கத்தா வந்தபோதும் பீலேவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கத் தவறவில்லை.கொல்கத்தா, நேதாஜி உள்ளரங்கில் அக். 12ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், 10 நாட்கள் முன்பாகவே தனது 75வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கிரிக்கெட் நட்சத்திரமும் அத்லெடிகோ டி கொல்கத்தா கால்பந்து கிளப் இணை உரிமையாளருமான சவுரவ் கங்குலி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்பட பலர் கலந்துகொண்டு பீலேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். டெல்லியில் அக். 16ம் தேதி சுப்ரதோ கோப்பை யு-17 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை தொடங்கி வைத்த பீலே, இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பாராட்டினார்.


Tags : Maharaja' Pele , The world of football mourns the death of 'Maharaja' Pele
× RELATED பிளே ஆப் வாய்பை தக்க வைக்க கொல்கத்தாவை வெல்லுமா மும்பை