×

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் சேவை தொடக்கம்; ரயில்வேயை நவீனமயமாக்க வரலாறு காணாத முதலீடு: பிரதமர் மோடி பேச்சு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாட்டின் 7வது வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ``நாட்டின் ரயில்வே கட்டமைப்பை நவீனமயமாக்க வரலாறு காணாத வகையில் முதலீடு செய்யப்படுகிறது,’’ என்று கூறினார். மேற்கு வங்கத்தில், வடகிழக்கின் நுழைவுவாயிலாக கருதப்படும் ஹவுரா - நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.  இதன் மூலம், ஹவுரா-நியூ ஜல்பைக்குரி இடையேயான 600 கி.மீ தூரத்தை 7.45 மணி நேரத்தில் கடக்கலாம். இதனை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ``நியூ ஜல்பைகுரி உள்பட இப்பகுதியில் உள்ள ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது.

`வந்தே மாதரம்’ என்ற முழக்கம் உருவாகிய மாநிலத்தில் இருந்து இன்றைய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குகிறது. 1943ம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 30) தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அந்தமான் நிகோபார் தீவில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். எனவே தான், இன்றைய நாளில் வந்தே பாரத் சேவையை தொடங்கத் திட்டமிடப்பட்டது. இந்திய சுதந்திர அமிர்த பெருவிழா காலத்தில், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு எதிர்நோக்கு அணுகுமுறையை அரசு பின்பற்றுகிறது. உலகமே இந்தியாவின் மீது அதீத நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இருக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழ வேண்டும்,’’ என்று கூறினார்.

மேடை ஏற மறுத்த மம்தா
வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ், முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பாஜ தொண்டர்கள் `ஜெய் ராம்’ என முழக்கமிட்டனர். இதனால் எரிச்சலடைந்த முதல்வர் மம்தா மேடை ஏற மறுத்து விட்டார். ஆளுநரும், ரயில்வே அமைச்சரும் எவ்வளவோ சமாதானபடுத்தியும், வற்புறுத்தியும் அதற்கு மம்தா இணங்க மறுத்து மேடை ஏறவில்லை.

ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழாவில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘உங்கள் தாயாரின் மறைவுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. உங்களின் தாயார் எங்களுக்கும் தாயார்தான். இந்த நேரத்தில் எனது தாயாரை நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து பணியாற்ற கடவுள் உங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்க வேண்டும். தயவுசெய்து கொஞ்சம் ஓய்வு எடுங்கள்’’ என கூறினார்.

Tags : Vande Bharat Seva ,West Bengal ,PM Modi , Vande Bharat Seva started in West Bengal; Unprecedented Investment to Modernize Railways: PM Modi Speech
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி