×

பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கையேடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை தொகுப்பு கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு டான்சீட் எனும் தமிழ்நாடு அரசு புத்தொழில் ஆதார மானிய நிதி திட்டத்தின் கீழ் மானியமாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. நிலைத்த நீடித்த வளர்ச்சி, காலநிலை மாற்ற மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுழற்சி பொருளாதாரம் ஆகியவற்றை மையமாக கொண்டு இயங்கும் பசுமை தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், ஊரக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக செயல்படும் நிறுவனங்கள் மற்றும்  முதன்மை பங்குதாரர்களாக பெண்களை கொண்டிருக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, டான்சீட் மானிய நிதி 10 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானிய நிதி தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு, ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தகுதியான நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானிய நிதியாக ‘தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி -டான்சீட்’ திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. இதுவரை நடந்த 3 பதிப்புகளில் 60 நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. தற்போது, டான்சீட் 4வது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 1029 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. பல கட்டமாக நடந்த மதிப்பீட்டு பணிக்கு பின்பு முதற்கட்டமாக பசுமை தொழில் நுட்பம் சார்ந்து இயங்கும் 7 நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் 8 நிறுவனங்கள் மற்றும் பெண்களை நிறுவனர் அல்லது இணை நிறுவனர்களாக கொண்டிருக்கும் 10 நிறுவனங்கள் என மொத்தம் 25 நிறுவனங்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை  செயலகத்தில், தலா ரூ.5  லட்சம் வீதம் மொத்தம் 1.25 கோடி ரூபாய் புத்தொழில் ஆதார மானிய நிதியினை  வழங்கினார். தொழில் முனைவோர்களுக்கான ‘வழிகாட்டி மென்பொருள்’ தளத்தையும் தொடங்கி வைத்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை  சார்பில், பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு  மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை குறித்த கையேட்டையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு, துறை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin , Special Guide for Green Technology, Rural Livelihood Development and Women-led Enterprises: Chief Minister M. K. Stalin Released
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...