அர்ப்பணிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு நற்சான்றிதழ்: துணை கமிஷனர் வழங்கினார்

பெரம்பூர்: எம்கேபி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆண்டு முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட காவலர்களை, துணை கமிஷனர் கவுரவித்தார். வியாசர்பாடி எம்கேபி நகர், கொடுங்கையூர் என அனைத்து மகளிர் உள்ளிட்ட காவல் நிலையங்களை உள்ளடக்கிய எம்கேபி நகர் சரகத்தில், இந்த வருடம் முழுவதும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய போலீசாரை கவுரப்படுத்தும் நிகழ்ச்சி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. எம்கேபி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர்கள் தமிழ்வாணன், அழகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், ஆண்டு முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஒவ்வொரு காவலர்களுக்கும் தனித்தனியாக மேடையில் வரவழைத்து அவர்களுக்கு சால்வை அனிவித்து, பரிசு பொருட்கள், நற்சான்றிதழை துணை கமிஷனர் ஈஸ்வரன் வழங்கினார். நிகழ்ச்சியில் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்ட காவலர்கள், கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். அவர்களுக்கு அறுசுவை உணவும் பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில், எம்கேபி நகர் காவல் நிலைய போலீசார், கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் மற்றும் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் என 3 காவல் நிலையங்களை சேர்ந்த அனைத்து இன்ஸ்பெக்டர்கள், உதவி இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: