×

கவுரவ விரிவுரையாளர் பணிகளுக்கு ஜன.4ல் நேர்முக தேர்வு: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: கவுரவ விரிவுரையாளர் பணிகளுக்கான நேர்முக தேர்வு ஜனவரி 4ம் தேதி தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 1,895 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன் அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தமிழக முதல்வர் சொன்னதன் அடிப்படையில், இணை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழுதான் நேர்முக தேர்வுக்கு வரவழைத்து அவர்களை தேர்ந்தெடுப்பார்கள். நேர்முக தேர்வுக்கு வரக்கூடிய விரிவுரையாளர்களிடம் அந்த துறை சார்ந்த நீண்ட அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் கேள்விகளை கேட்பதற்கு நியமிக்கப்படுவார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் இந்த நேர்முக தேர்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. அதில் கவுரவ விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வு நடக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 சதவிகித இடஒதுக்கீட்டின்படி 19 கவுரவ விரிவுரையாளர் பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்.

இதை தொடர்ந்து, தமிழகத்தில் 8 வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிகளுக்கான நேர்முக தேர்வுகள் ஜனவரி 4ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறும். அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள், விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வின்போது அவர்களின் திறனை அறிந்து தேர்வு செய்யப்படுவார்கள். தரத்தின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பரிந்துரையின் அடிப்படையில் அல்ல. பிஎச்டி படித்தவர்கள் மற்றும் நெட் ஸ்லெட் தேர்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 9,915 பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். யார் எந்த பாடத்திட்டங்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதை நாளை (இன்று) அறிவிப்போம். இந்த தேர்வு முறையில் முழுக்க முழுக்க இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Ponmudi , Interview for Honorary Lecturer Jobs on Jan. 4: Minister Ponmudi interview
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...