18 குழந்தைகள் பலி எதிரொலி நொய்டா மருந்து நிறுவனத்தின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் இருமல், மருந்து குடித்த 18  குழந்தைகள் பலியானதால்,நொய்டா மருந்து நிறுவனத்தில் உற்பத்தி தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மரியன் பயோடெக் நிறுவனம் டோக் 1 மேக்ஸ் என்ற குழந்தைகளுக்கான இருமல், சளிக்கான மருந்து தயாரிக்கிறது. இந்த இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் பலியானதாக, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது. ஏற்கெனவே, காம்பியாவில் இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள், இறந்த சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில்,‘‘டோக் 1 மேக்ஸ் இருமல் மருந்து  தயாரிக்கும் கம்பெனி சிரப் மருந்தின் மாதிரி  எடுக்கப்பட்டு சண்டிகரில் உள்ள மண்டல மருந்து சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  ஆய்வு முடிந்த பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஒன்றிய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த விவகாரம் தொடர்பாக உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுகுறித்த தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் உஸ்பெகிஸ்தான் நாடு இதுவரை இந்திய அதிகாரிகளுடன் பேசவில்லை’’ என்றனர்.

மரியன் பயோடெக் கம்பெனியின் வக்கீல் ஹசன் ஹாரிஸ் கூறுகையில்,‘‘ இதே மருந்து 10 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு அறிக்கை கிடைத்த பின்னர் நாங்கள் முடிவெடுப்போம். தற்போது மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். 

Related Stories: