திருவனந்தபுரம்: ‘அண்டை நாடுகளுடன் சுமூக உறவு வைத்து கொள்ள இந்தியா விரும்புகிறது, அதற்காக பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது’ என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள சிவகிரி மடத்தின் 90 வது ஆண்டு புனித பயண நிகழ்வில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் கலந்து கொண்டு பேசுகையில்,‘‘ ஒன்றிய அரசின் சுய சார்பு திட்டத்தால் இந்தியா உலக அளவில் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்திய ராணுவமும் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் நண்பர்களை மாற்ற முடியும். அதற்காக நாட்டை மாற்ற முடியாது என்று அடல் பிகாரி வாஜ்பாய் முன்பு கூறினார். அண்டை நாடுகளுடன் நல்ல நட்பு ரீதியிலான உறவை கடைப்பிடிக்க வேண்டும். அண்டை நாடுகளின் நட்புறவுக்காக இந்தியா ஒரு போதும் அதன் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாது. நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்’’ என்றார்.
