பத்மாவதி தாயார் கோயிலுக்கு மார்ச் 17ல் குடமுழுக்கு தி.நகர் திருப்பதி கோயிலில் புத்தாண்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் பேட்டி

சென்னை: பத்மாவதி தாயார் கோயிலுக்கு மார்ச் 17ம் தேதி குடமுழுக்கு விழா நடத்தப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி திருப்பதி தேவஸ்தான தலைவர் ஏ.ஜெ.சேகர் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி திருப்பதி தேவஸ்தான தலைவர் ஏ.ஜெ.சேகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புத்தாண்டு அன்று ஜனவரி 1ம் தேதி சிறப்பு தரிசனத்திற்காக அதிகாலை 3 மணியாளவில் கோயில் திறக்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். ரூ.50க்கான 40 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. புத்தாண்டு மற்றும் ஏகாதசி அன்று வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் சிறிய அளவிலான லட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கோயிலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் காவல்துறை பாதுகாப்பு, மருத்துவ வசதி, கழிவு வசதி போன்ற அனைத்தும் தயார்நிலையில் உள்ளது. புத்தாண்டிற்கு அடுத்த நாளான 2ம் தேதி வைகுண்ட ஏகாதேசி என்பதால் அன்றும் அதிகாலை 3 மணிக்கே கோயில் திறக்கப்படும். கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையுடன் 200 தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் போல் சென்னையில் ஒரு கோயில் கட்டுவதற்கு இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தி.நகரிலே ரூபாய் 70 கோடிக்கு கட்ட  முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் 2024ம் ஆண்டு தொடங்கப்படும். பத்மாவதி தாயார் கோயில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதன் குடமுழுக்கு விழா மார்ச் 17ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது துணை தலைவர் மோகன் ராவ், உறுப்பினர்கள் காயத்திரி தேவி, அனில் ரெட்டி, பரசுராம் உடனிருந்தனர்.  

* நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்

* காலை 10-10.30 மணிக்கு நெய்வேத்தியம்

* மதியம் 2-2.30 மணிக்கு இடைவேளை

* மாலை 5.30-6 மணிக்கு நெய்வேத்தியம்

Related Stories: