×

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகல்: 2வது பெரிய கட்சி நாங்கள் தான்; 40 நாடாளுமன்ற தொகுதியிலும் நடைபயணம்; தொண்டர்கள் மத்தியில் அன்புமணி ஆவேச பேச்சு

புதுச்சேரி: ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். தற்போது  அதிமுக 4 ஆக உடைந்து உட்கட்சி பூசலால் தவித்து வருகிறது. இதனால் திமுகவுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய கட்சியாக பாமக தான் உள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதியிலும் விரைவில் நடைபயணம் மேற்கொள்ளப்படும்’’ என பாமக தலைவர் அன்புமணி ஆவேசமாக பேசினார். 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

திமுக ஆட்சிக்கு வந்த பின் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, விலகி தனியாக நின்று உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதாக அறிவித்தது. பாமகவின் இந்த அறிவிப்பு அதிமுக தலைவர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது, பாமக மற்றும் அதிமுக நிர்வாகிகளிடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து பேசினர். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பாமக பெற முடியவில்லை. மாவட்ட கவுன்சிலர் பதவியில் ஒரு இடத்தை கூட பாமகவால் பிடிக்க முடியாமல் போனது. பாமக சார்பில் போட்டியிட்டவர்களில் 43 பேர் ஒன்றிய கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாமகவுக்கு ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவி கூட கிடைக்காதது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் என 4 அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் அதற்கான வழிமுறைகளை 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுத்துவோம் என்றும் பாமக தலைவர் அன்புமணி அறிவித்தார். எனவே அதிமுக கூட்டணியை பாமக முறித்துக் கொண்டதாக கூறப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு செய்த அன்புமணி அதிமுக கூட்டணியில் தற்போது நீடிக்கவில்லை என அறிவித்தார்.

மாவட்டம்தோறும் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி  2026ல் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். அதற்கான செயல் திட்டங்கள் மற்றும் கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பாமகவினர் ஈடுபட வேண்டும் என அவர் பேசி வந்தார். பாமகவில் யார் ஒருவர் 100 ஓட்டுகளை பெற்று தருகிறாரோ அவர் தான் பாமகவின் உண்மையான தொண்டன். ஒவ்வொரு தொண்டனும் 100 ஓட்டுக்களை பெற்று தந்தால் பாமக மிகப்பெரிய வெற்றியை பெறும் என ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் 2022ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2023ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் புதுச்சேரி அருகே பட்டானூரில் நேற்று நடந்தது.  பாமக நிறுவனர் ராமதாஸ்  முன்னிலையில் பேசிய அன்புமணி, தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கலைந்து, சீரழிந்து, அழிந்துள்ளது. பாமக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதால் கூட்டணி வைத்தோம். தற்போது அதிமுக 4ஆக உடைந்து உட்கட்சி பூசலால் தவித்து வருகிறது. இதனால் திமுகவுக்கு அடுத்தப்படியாக 2வது பெரிய கட்சியாக பாமக தான் உள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதியிலும் விரைவில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என ஆவேசமாக பேசினார்.

இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக முக்கிய நிர்வாகி கூறுகையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கட்சி தலைவர் அன்புமணி ஆகியோர் பேசினர். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் தான் கூட்டணி அமையும். அதற்கு முன்னேற்பாடுகளாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்க உள்ளோம். யாருடனும் பாமக கூட்டணி வைக்காது. ராமதாஸ் முன்னிலையில் திமுகவுக்கு அடுத்து பாமக உள்ளது என அன்புமணி பேசியதால் இனி அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்காது என்றார்.

* பாஜக கூட்டணிக்கும் முழுக்கு
பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் விளம்பர அரசியல் செய்கின்றனர். மேலும் ஒரு கட்சியில் இருந்து சத்தம் மட்டுமே வருகிறது. உள்ளே ஒன்றும் கிடையாது. அது எந்த கட்சி என்று நன்றாக தெரியும். தினமும் அவர்களை பற்றி செய்தி வரவேண்டும். அவர் என்ன பேசுவார் என்று அவருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கும் தெரியாது. ஆனால் சத்தம் மட்டும் வரும் என்று கூறி தனது வாட்ச்சை காண்பித்து அவர் யார் என தெரிகிறதா என்று கேட்டார். அப்போது பாஜக அண்ணாமலை என்று நிர்வாகிகள் கோரசாக சத்தம் போட்டதால் சிரித்துக் கொண்டு முடித்துவிட்டார். சமீபத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தான் கட்டியுள்ள வாட்ச் ரபேல் வாட்ச் என கூறியது பரபரப்பாகி பேசப்பட்டது. இந்நிலையில் வாட்சை காட்டி விளம்பர அரசியல் செய்து வருகின்றனர் என்று அன்புமணி கூறி நேரடியாக அண்ணாமலையை தாக்கியதால் வருங்காலத்தில் பாஜவுடன் பாமக கூட்டணி அமைக்காது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : BMC ,AIADMK ,Anbumani , BMC exit from AIADMK alliance: We are the 2nd largest party; Walking in 40 parliamentary constituencies; Anbumani's passionate speech among the volunteers
× RELATED இரட்டை இலைக்கு போட்டு வாக்குகளை...