சென்னை: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் 2ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருவள்ளூரில் புகழ்பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் 59வது திவ்யதேசமான திருவள்ளூர் வைத்திய வீரராகவப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 2ம்தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. அதிகாலை 2.30 மணி முதல் 3 மணி வரை தைலகாப்பு திரை நீக்கி, திருவடி தரிசனத்துடன் மார்கழி மாத பூஜை, 3 மணி முதல் 3.45 மணி வரை தனுர்மாத தரிசனம், தொடர்ந்து ரத்தின அங்கியுடன் பெருமாள் பரமபதம வாசல் திறப்பு காலை 5 மணியளவில் நடக்கிறது.
அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வைத்திய வீரராகவப் பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிப்பார். இதை தொடர்ந்து, பன்னிரு ஆழ்வார்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி முதல் 5 நாள் 6 ஆழ்வார்களுக்கு பாசுரம் நடைபெறும். அடுத்த 5 நாள் திருமங்கை ஆழ்வார் பாசுரம் நடக்கிறது. இதையடுத்து 7 மணியளவில் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மதியம் 1 மணியளவில் நவகலச ஸ்தூபன திருமஞ்சனத்தின் போது ஆழ்வார் மற்றும் ஆச்சாரியார்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு ராப்பத்து உற்சவம் தொடங்கி வருகிற 11ம்தேதி வரை நடைபெறும் என கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.