பந்தலூர் அருகே தொழிலாளி வீட்டை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள்: வனத்துறை வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஒன்றியம் சேரம்பாடி வனச்சரகம் சேரங்கோடு செக்போஸ்ட் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் டேன் டீ தேயிலை தோட்டம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சேரங்கோடு செக்போஸ்ட் பகுதியில் குட்டியுடன் 5 காட்டு யானைகள் உணவு தேடி வந்தன. அங்கு பன்னீர்செல்வம் என்பவரின் வீட்டின் பின்பக்கம் கூரை மற்றும் சுவற்றை இடித்து சேதப்படுத்தின. இதனால், வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு சேரம்பாடி வனச்சரகம் ரேஞ்சர் அய்யனார் மற்றும் வனத்துறையினர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, அப்பகுதி மக்கள், வனத்துறை வாகனத்தை சிறை பிடித்து, காட்டு யானைகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். யானை தாக்கி சேதமடைந்த வீட்டிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சேரம்பாடி வனச்சரக பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அப்பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானை தாக்கி சேதமடைந்த வீட்டிற்கு வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்க மாவட்ட வன அலுவலருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் ரேஞ்சர் அய்யனார் கூறினார். இதை ஏற்று பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: