எம்கேபி நகரில் பரபரப்பு: சுமை தூக்கும் தொழிலாளிக்கு சரமாரி கத்தி வெட்டு; பிரபல ரவுடி, சிறுவன் கைது

பெரம்பூர்: எம்கேபி நகரில் சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய பிரபல ரவுடி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்கேபி நகர் 17வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் முருகன் (24). சுமை தூக்கும் தொழிலாளி. கடந்த 27ம்தேதி மாலை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் வழியாக பைக்கில் சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர்,  முருகனை  வழிமடக்கி, மறைத்து வைத்திருந்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தபோது, வியாசர்பாடி சத்தியமூர்த்திநகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (எ) காட்டான் ராஜ் (26), அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன்  ஆகியோர்தான் வெட்டியது தெரியவந்தது. 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கடந்தாண்டு ராஜசேகர் (எ) காட்டான் ராஜை முருகன் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனால் முன்விரோதம் ஏற்பட்டது. பழிக்குப்பழியாக ராஜசேகர், முருகனை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்’ என்பது தெரியவந்தது. ராஜசேகர் (எ) காட்டன் ராஜ் மீது எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட ராஜசேகர் (எ) காட்டான் ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: