வாலாஜாபாத் அருகே வெள்ளேரி அம்மன் கோயில் பகுதியில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி: பொதுமக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே வெள்ளேரி அம்மன் கோயில் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு வெள்ளேரி அம்மன் கோயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

தற்போது, இப்பகுதியை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகிறது. இப்பகுதி மக்களுக்கு சுழற்சி முறையில் விநியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சீரான முறையில் குடிநீர் வழங்க கோரி பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு சுழற்சி முறையில் விநியோகிக்கப்படும் குடிநீர் போதுமான அளவில் கிடைப்பதில்லை. அதிகரித்து வரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்து விட்டோம்.

 இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இல்லாததால் குறைந்த அளவே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியை ஆய்வு செய்து மினி மோட்டார் டேங்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதே நேரத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து கொடுத்தால் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்’ என்றனர்.

Related Stories: