×

நேப்பியர் பாலம் அருகே வாகன விபத்து; காயமடைந்து போராடிய நபரை மருத்துவமனைக்கு அனுப்பிய தலைமை செயலாளர் இறையன்பு: அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீஸ் விசாரணை

சென்னை: நேப்பியர் பாலம் அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். இதை பார்த்த தலைமை செயலாளர் இறையன்பு காயமடைந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் அருகே இன்று காலை வேளச்சேரியில் இருந்து பூக்கடை நோக்கி தனியார் நிறுவன ஊழியர் குமரேசன்(34) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆட்டோ ஒன்று பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த குமரேசனுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது அந்த வழியாக தலைமை செயலகம் நோக்கி தலைமை செயலாளர் இறையன்பு தனது காரில் சென்றார்.

விபத்தை நேரில் பார்த்த அவர், தனது காரில் இருந்து இறங்கி காயமடைந்த நபருக்கு உதவி செய்தார். அதோடு இல்லாமல் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து உடன் இருந்து காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். தலைமை செயலாளரின் மனிதநேயத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக இறையன்புக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், விபத்து தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நேப்பியர் பாலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Napier Bridge ,Chief Secretary ,Diyanbu ,Annashewar Traffic Police , Vehicle accident near Napier Bridge; Chief Secretary Thaoyanpu who sent the injured and struggling person to the hospital: Anna Sadukkum traffic police investigation
× RELATED சென்னை நேப்பியர் பாலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து