×

மேட்டுப்பாளையம் அருகே வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க மேலும் ஒரு கூண்டு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த ஆதிமாதையனூரில் சிறுத்தையை பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தோலம்பாளையம், ஆதிமாதையனூர் உள்ளிட்ட பகுதிகள் அடர் வனப்பகுதிக்கு மிக அருகாமையிலேயே அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிமாதையனூர் பகுதியில் விவசாயி ஒருவரின் கன்றுக்குட்டியை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கன்றின் உடலை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தோலம்பாளையம் அடுத்துள்ள தோகைமலை வனப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க ஒரு கூண்டு வைக்கப்பட்டது.  அந்த கூண்டில் ஆட்டுக்குட்டி ஒன்றும் கட்டி வைக்கப்பட்டது. தற்போது ஆதிமாதையனூர் பகுதி மக்களின் அச்சம் காரணமாக மீண்டும் ஒரு கூண்டு அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. தோலம்பாளையம் அருகே உள்ள தோகைமலை வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கூண்டின் மேல் போடப்பட்டிருந்த இலை மற்றும் சருகுகள் தற்போது காய்ந்து விட்டது. மேலும், கட்டப்பட்டுள்ள ஆட்டுக்குட்டிக்கு முறையான தீவனமோ, தண்ணீரோ வைக்கப்படவில்லை என்ற குற்றச்சா்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில்,``வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டின் மேல் போடப்பட்டுள்ள இலைகள் காய்ந்து விட்டது.

ஆட்டுக்குட்டிக்கு முறையான தீவனமோ, தண்ணீரோ வைக்கப்படவில்லை. இப்படியிருந்தால் எப்படி சிறுத்தை சிக்கும்? வனத்துறையினர் கூண்டு வைத்ததோடு தங்களது பணி முடிந்து விட்டதாக நினைக்கின்றனர். கூண்டு வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.  தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை வலியுறுத்தி வரும் 31ம் தேதி காரமடையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

Tags : Mettupalayam , One more cage to capture livestock hunting leopard near Mettupalayam
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது