ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேறுமா?: பல்வேறு கோரிக்கைகளுடன் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், சாலையில் கிடக்கும் குப்பைகள், சுகாதாரமற்ற செயல்படாத கழிப்பறைகள், புதர்மண்டி கிடக்கும் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளால் அப்பகுதி மக்கள் சுகாதாரமற்ற நிலையில் வசித்து வருகின்றனர். எனவே கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சுகாதாரம் நிறைந்த பகுதியாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெங்சமுத்திரம் ஊராட்சி பகுதிகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி பகுதியில் நாச்சியார்புரம், குரும்பபட்டி, நேதாஜி காலனி, ஜம்புலிபுத்தூர், லட்சுமிபுரம், கதிர்நரசிங்கபுரம், அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இதில் ரெங்கசமுத்திரம் கிராமத்தில் மட்டும் 2 ஆயியத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் ஓட்டல் கடை வைத்தும், ஓட்டலில் வேலை செய்தும் வருகின்றனர்.

ரெங்கசமுத்திரம் கிராமத்தில் கடந்த 3 வருடங்களாக போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததாலும், போதுமான வளர்ச்சிப் பணிகள் நடைபெறாததாலும் கிராமம் சுகாதாரமின்றி பின்தங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. இந்த கிராமத்தில் மொத்தம் 3 வார்டுகளை சேர்ந்த பகுதிகளில் கழிவுநீர் வாறுகால் வசதி, சாலை வசதி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் உள்ளது. இதில் 2 வார்டு ஓடைத்தெரு பகுதியில் சாலையில் குப்பைகளை கொட்டி தேங்கி கிடக்கிறது. குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் விசுவதுடன், குப்பையில் இருந்து ஈக்கள், கொசுக்கள் உருவாகி சுகாதாரகேடு ஏற்படுகிறது. சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகளால் மக்கள் அந்த பகுதியில் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.

ஓடைத்தெரு பகுதியில் கழிப்பறை ஒன்று உள்ளது. அந்த கழிப்பறைக்கு ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வசதி ஏற்படுத்தாத காரணத்தால் கழிப்பறை புதர்மண்டி காட்சியளிக்கிறது. கழிப்பறையை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் கழிப்பறை கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளது. இந்த கழிப்பறையையும் ஆபாத்துடன், தண்ணீர் இல்லாமலும் பயன்படுத்தி வருவதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

ரெங்கசமுத்திரம் கிராமத்திற்கு ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியேகிக்கப்பட்டு வருகிறது. கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் வகையில் கிராமத்தின் அதே பகுதியில் மேல்நிலைத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது குப்பைகள் தேங்கி இருக்கும் இடம் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் கழிப்பறை இதற்கிடையில் இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைந்துள்ளது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி சுற்றி புதர்மண்டி கிடக்கிறது.

குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கழிவுநீரும், மழைநீரும் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குடிநீர் மேல்நிலைத் தொட்டியை சுற்றி புதர்மண்டி கிடப்பதால் குடிநீரிலும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே சமுதாய கூடம் உள்ளது. பொதுமக்கள் விசேஷம் நடத்துவதற்கும், மக்களுக்கு தேவையான கூட்டங்கள் நடத்துவதற்கும், கிராம சபை கூட்டம், கோரிக்கை கூட்டம் நடத்துவதற்கும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கடந்த 2001ம் ஆண்டு சமுதாய கூடம் கட்டப்பட்டது.

சில ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தி வந்த சமுதாய கூடம். தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது. சமுதாயக்கூடத்தின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து காணப்படுகிறது. கட்டடங்களும் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சமுதாயக்கூடத்தில் பல ஆண்டுகளாக எந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியும் பொதுமக்கள் சம்பந்தமான கூட்டமும் நடத்தப்படவில்லை. மேலும் இந்த சமுதாயக்கூடம் சீரமைக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பகலில் சூதாட்டம் விளையாடுவதற்கும், இரவில் மது கூடங்களாகவும் பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

*சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்படுமா?

கிராமவாசி பெருமாள் கூறுகையில், ‘‘தேங்கி கிடக்கும் குப்பைகள், சுகாதாரமற்ற கழிப்பறைகள், புதர்மண்டி கிடக்கும் மேல்நிலைத் தொட்டிகளால் எங்கள் பகுதிக்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. வெளியூர்களில் இருந்து வருபவர்களும், உறவினர்களும் கூட எங்கள் பகுதிக்கு வரமுடியாத நிலை உள்ளது.

இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது தெருவில் உள்ள சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி, கழிப்பறையை சீரமைத்து சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

*செயல்படாத சமுதாயக்கூடம்

சமூக ஆர்வலர் ரமேஷ் கூறுகையில்,ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் இதுவரை கிராமத்திற்கு எந்த ஒரு வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை. பல்வேறு தேவைகளுக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றால் எப்போதும் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. சமுதாயக்கூடமும் செயல்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து வீட்டிற்கு முறையாக குப்பைகளையும் வாங்குவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: