×

அருப்புக்கோட்டையில் பல்வேறு இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகளை தனியார் கபளீகரம் செய்துள்ளனர். இந்து அறநிலையத்துறை இந்த சொத்துகளை மீட்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. புகழ் வாய்ந்த இக்கோயிலுக்கு கட்டுப்பட்டு பல்வேறு ஊர்களில் 64 சிறு கோயில்கள் உள்ளன. இவற்றிற்கான கோயில் நிலங்களும் உள்ளன. சொக்கநாதர் கோயிலுக்கு மட்டும் நகரில் பல இடங்களில் ஏக்கர் கணக்கில் சொத்துக்கள் உள்ளன. இவற்றை முறையாக பராமரிப்பு செய்யாமல் விட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தனியார் வசமாகிவிட்டன. அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் சொக்கநாதசுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட திருக்குளத்தை மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. திருக்குளம் பகுதியில் வினைதீர்க்கும் விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலை மறைத்து கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் திருக்குளத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. மேலும் கோயில் கும்பாபிஷேக பணிகளும் துவங்கப்படவில்லை. திருக்குளத்தைச்சுற்றி 5 சென்ட் அளவில் கோயில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாப்பாங்குளம் வல்லபகணபதி கோயிலை சுற்றி கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் 18 ஏக்கர் குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இதனை கடந்த 1996ம் ஆண்டு தனி நபர் ஒருவர் பட்டா மாறுதல் செய்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அருப்புக்கோட்டை நேதாஜி வீதியில் 50 சென்ட் கோயில் நிலம் உள்ளது. இந்த இடத்தில் இது கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இருந்தாலும் தனியார் ஆக்கிரமித்து வருகின்றனர். இந்த இடத்தில் வணிக நிறுவனங்கள் கட்டலாம். அதுவரை முள்வேலி அமைக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான இடங்களை முதலில் இந்து அறநிலையத்துறையினர் கண்டுபிடித்து அந்த இடங்களுக்கு வேலி அமைத்து எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறையும். மேலும் தாதன்குளம் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடம் திருச்சுழி ரோட்டில் உள்ளது. இந்த இடத்தில் 17 கட்டிடங்களில் 50க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளது. கோடிக்காணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த கோயில் சொத்து தனியார் வசமாகிவிட்டது.

இந்த சொத்துகளுக்கு வழக்குப்போட்டு கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், சொத்தை கைப்பற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் உள்ளது. அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் உள்ள 1.5 ஏக்கர் கோயில் நிலத்தை 20 பேர்வரை போலி பத்திரம் தயார் செய்து பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது சொக்கநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் வேளையில் கோயில் நிலங்களை கைப்பற்ற வேண்டும். மேலும் கோயில் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்து அறநிலையத்துறையினர் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என பக்தர்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்பிரச்னை குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் கூறுகையில், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனர்.

Tags : Arupukottai , Encroachment of temple lands worth crores of rupees at various places in Aruppukkottai
× RELATED அருப்புக்கோட்டையில் மீனாட்சி கோயில்...