×

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனைத்து ஹோட்டல்களிலும் 80% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: புதிய வகை கொரோன அச்சுறுத்தலை அடுத்து தமிழகத்தில் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உடன் காவல் கூடுதல் ஆணையர் ஆலோசனை நடத்தினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனைத்து ஹோட்டல்களிலும் 80% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், சொகுசு விடுதிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும், தற்காலிக மேடைகள் அமைக்கக்கூடாது, அதிக போதையில் இருப்பவர்களை ஹோட்டலுக்குள் அனுமதிக்கக்கூடாது, போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் சி.சி.டி.வி கேமெராக்கள் முழுமையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும், நள்ளிரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் நடத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக போதையில் இருப்பவர்களை அவர்களுடைய வாகனத்தில் செல்ல அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு வரும் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் சென்னை கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லையென காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது, இதை தொடர்ந்து கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் படி வரும் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், மற்றும் கடற்கரை ஓரங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெரினா, சாந்தோம், பேசன்நகர், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், ஆகிய கடற்கரை பகுதிகளில் வரும் 31ம் தேதி இரவு எட்டுமணிக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது, மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  


Tags : New Year , All hotels to admit only 80% customers during New Year celebrations: Police notice
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்