×

ஒரே நாளில் 120 ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதால் பேரழிவு: புத்தாண்டை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் புகார்

கீவ்: உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் ஒரே நாளில் 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. மின் கட்டமைப்புகள் சேதமடைந்ததால் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கி இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை 10 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் ரஷ்ய ராணுவம் சமீபத்திய நாட்களாக ஏவுகணை தாக்குதலை அதிகப்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளின் மட்டும் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது 120 ஏவுகணை வீசி ரஷ்ய படை தாக்குதல் நடத்தியுள்ளது.

கீவ் நகரத்தில் சரமாரியாக நிகழ்த்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் குடியிருப்புகள், மருத்துவமனைகள் சேதமடைந்தன. மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ரயில்வே சுரங்க பாதையில் தஞ்சமடைந்தனர். இதேபோல் கார்கேவ், ஒடெசா, எல்விவ், வின்னிட்சியா உள்ளிட்ட மகாணங்கள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர். கார்கேவ் நகரத்தில் மின்கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. மின் கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. ரஷ்ய படைகள் ஏவிய 50-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. புத்தாண்டிற்குள் கீவ் பிராந்தியத்தை கைப்பற்றவே ரஷ்ய இத்தகைய கொடூர தாக்குதலில் ஈடுபடுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.  


Tags : Ukraine , missile, attack, disaster, new year, ukraine, complaint
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...