×

திருவலம் பேரூராட்சி பஸ் நிலையத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் அகற்றம்

*சாலை விரிவாக்க பணிக்காக நடவடிக்கை

திருவலம் :  வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சிக்குட்பட்ட பொன்னை கூட்ரோடு பகுதி சென்னை- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருவலம் பொன்னையாற்று இரும்பு பாலம் நுழைவு வாயில் சாலை வரைக்கும் சாலை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

அதன்படி சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. சாலையோரம் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் மின்வாரியத்துறை ஒப்பந்ததாரர் பணியாளர்கள் மூலம்
கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. திருவலம் பஸ் நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் அடையாள சின்னமாக சாலையோரம் இருந்தது.

இந்த அரசமரத்தின் அடியில் திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் நினைவாக பாம்பு வடிவிலான கற்சிலை பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகும். இதனை அப்பகுதியினர் வணங்கி வந்தனர். மேலும் இந்த அரசமரமானது திருவலம் பொன்னையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ராஜேந்திரா இரும்பு பாலத்தின் நுழைவு பகுதிக்கு அருகேயுள்ளதால் அம்மரம் கம்பீரமாக காட்சியளித்து வந்தது.

இந்நிலையில் திருவலம் பேரூராட்சி பஸ் நிலைய பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர், மின்வாரியதுறையினர் நேற்று காலை சாலையோரம் உள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசமரத்தினை நவீன அறுக்கும் இயந்திரத்தின் மூலம் அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Tags : Thiruvalam Raksha Bus Station , Thiruvalam, Vellore, People, royal tree, 100 years Pld tree
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி