×

டெல்லியுடன் ரஞ்சி மோதல்; முன்னிலை பெற்றது தமிழ்நாடு: பிரதோஷ் அபார சதம்

டெல்லி: ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் சுற்றின் 3வது ஆட்டத்தில், டெல்லி அணிக்கு எதிராக தமிழ்நாடு முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீச... டெல்லி 303 ரன் குவித்து ஆல் அவுட்டானது (97.1 ஓவர்).  துருவ் 66, பிரான்ஷு 58, ஜான்டி 57, லலித் 40 ரன் எடுத்தனர். தமிழக வீரர்கள் விக்னேஷ், சந்தீப் தலா 4 விக்கெட், அஷ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம், 2ம் நாள் முடிவில்   5 விக்கெட் இழப்புக்கு  214 ரன் எடுத்திருந்தது. கேப்டன் இந்திரஜித் 71, அபராஜித் 57 ரன் விளாசினர்.

விஜய் சங்கர் 17,  பிரதோஷ் ரஞ்சன் பால் 5 ரன்னுடன் 3வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். இருவரும் பொறுமையாக விளையாட ஸ்கோர் உயர்ந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அரைசதம் விளாசிய விஜய் சங்கர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் கிஷோர் 4 ரன்னில் வெளியேறினார். அஷ்வின் கிறிஸ்ட்  கை கொடுக்க  பிரதோஷ் சதம் அடித்தார். அவர் 124 ரன் (212 பந்து, 16 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினார். 8 விக்கெட் இழப்புக்கு  427 ரன் என்ற ஸ்கோருடன் (116 ஓவர்) முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக தமிழ்நாடு அறிவித்தது. கிறிஸ்ட் 32, விக்னேஷ் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து 124 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி, 3ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்துள்ளது.  துருவ் (10), விகாஸ் (0) களத்தில் உள்ளனர். அனுஜ் 14 ரன் எடுத்து வாஷிங்டன் சுழலில் அவுட்டானார். இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் ஆட்டம் டிரா ஆகும் வாய்ப்பு அதிகம். அப்படி நடந்தால் தமிழ்நாடு அணிக்கு முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக 3 புள்ளி, டெல்லிக்கு 1 புள்ளி கிடைக்கும்.


Tags : Ranji ,Delhi ,Tamil Nadu ,Pradosh , Ranji clash with Delhi; Tamil Nadu took the lead: Pradosh's superb century
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...