×

தீண்டாமை பிரச்னையால் அனுமதி மறுக்கப்பட்ட புதுகை அய்யனார் கோயிலில் சமத்துவ பொங்கல் வழிபாடு: அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

புதுக்கோட்டை: தீண்டாமை பிரச்னையால் புதுக்கோட்டை இறையூர் அய்யனார் கோயிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற பொது வழிபாடு மற்றும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர் கவிதா ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், முத்துக்காடு ஊராட்சி, இறையூர் கிராமம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மனித மலத்தை கலந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கடந்த 27ம் தேதி இறையூர் கிராமத்திற்கு சென்ற கலெக்டர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் பொதுமக்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் பல தலைமுறைகளாக வழிபாடு செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதேபோல் ஒரு தேநீர் கடையில் இரட்டை குவளைமுறை பின்பற்றப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். பட்டியலின மக்களை அந்த கோயிலுக்குள் கலெக்டரே அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்தார். இரட்டை குவளைமுறை பின்பற்றிய டீக்கடை நடத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர். தீண்டாமை பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்ட கலெக்டர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தீண்டா மையை முடிவுக்க்உ கொண்டு வர இறையூர் அய்யனார் கோயிலில் அங்கு வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்தும் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நடந்தது. பட்டியலின மக்களை வருவாய்த்துறையினரும் ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகளும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தாம்பூல தட்டுடன் கோயிலுக்கு அழைத்துச் சென்று அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* கடும் நடவடிக்கை
அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், ‘குடிநீரில் மனிதகழிவை கலந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த குடிநீர் தொட்டிக்கு பதிலாக இன்னும் இரு தினங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

* கமல் வருத்தம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள சிறுமி கோபிகாஸ்ரீயின் தாயார் ராஜரெத்தினத்திடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இந்த சமுதாயத்தில் நிலவும் அவலங்கள் குறித்து வேதனை தெரிவித்ததோடு, மற்றவர்கள் உடல்நலம் குறித்தும் கவலை தெரிவித்தார். அச்சமின்றி புகாரளித்த பொதுமக்களை பாராட்டினார். இக்கிராம மக்களுக்கு நிரந்தர தீர்வாக, சுத்தமான குடிநீரை வழங்க ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார்’ என்று கூறப்பட்டுள்ளது. 


Tags : Pudukai Ayyanar , Equality Pongal worship at Pudugai Ayyanar Temple denied permission due to untouchability issue: Minister, Collector participate
× RELATED 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஸ்ரீ...