×

புதுக்கோட்டையில் தீண்டாமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த கலெக்டர், எஸ்.பி: ஆதிதிராவிடர் நல ஆணையம் பாராட்டு

சென்னை: புதுக்கோட்டையில் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து  ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அய்யனார் கோயிலில் ஆதிதிராவிடர்கள் கோயிலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் கோயில் நுழைவுக்கு ஆவன செய்தல், அதே கிராமத்தில் உள்ள தேநீர் கடையில் இரட்டை குவளை முறை கடைபிடிக்கப் படுவதாக குற்றம் சாட்டப்பட்ட தேநீர் கடையில் ஆய்வு  செய்து கடையின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்தனர்.

வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சாதியினர் பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனித மலக்கழிவுகள் மிதந்ததாக புகார் அளிக்கப்பட்டதும் தற்காலிக நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கவும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்துள்ளனர். மேலும் மூன்று சம்பவங்களை தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதுபோல மீண்டும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைபற்றியும் புதுக்கோட்டை ஆட்சித் தலைவர் மற்றும் எஸ்.பி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்துகிறது.

Tags : Pudukottai, SP ,Adi Dravidar Welfare Commission , Collector took action against untouchability in Pudukottai, SP: Adi Dravidar Welfare Commission commended
× RELATED கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு...