×

பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிட்டால் போராட்டம்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: பொங்கலையொட்டி தமிழக மக்களுக்கு திமுக அரசு 1,000 ரூபாய் ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்படும் என அறிவித்தது. இதற்காக இடைத்தரகர்களிடம் இருந்தும் வியாபாரிகளிடம் இருந்தும் கரும்பை வாங்காமல், நேரடியாக செங்கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். கரும்பு பிரச்னை முடிவதற்குள், விலையில்லா வேட்டி-சேலை பிரச்னை பூதாகரமாக வடிவெடுத்துள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன.

ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம்தான் வழங்கப்பட்டுள்ளதாவும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும்தான் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன. மேலும், துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கி உள்ளதாகவும், துணி நெய்யும்போது தறியில், நைந்துபோன நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதால், துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர்.

இதனால், 90 சதவீத நெசவாளர்கள், தங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட நூல் பேல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால் தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. வரும் தை பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vetti ,Pongal ,AIADMK ,Interim General Secretary ,Edappadi Palaniswami , Protest if Vetti-Sale is not provided for Pongal: Statement of AIADMK Interim General Secretary Edappadi Palaniswami
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...