×

உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சி: உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.238.41 கோடி செலவில் 5,635 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.308.29 கோடி மதிப்பீட்டிலான 5,951 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், 22,716 பயனாளிகளுக்கு ரூ.79.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 2,764 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 54,654 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.78 கோடி வங்கி கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள், 8 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகளை வழங்கினார்.

பின்னர், விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: டிஎன்பிஎல் 2வது அலகு மற்றும் சிப்காட் வளாகத்தை திறந்து வைக்கிறேன். இவை இரண்டும் திருச்சிக்கு மிக முக்கியமான சாதனை. தமிழகத்தின் தொழில்துறை மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது.  ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்த மாநில இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் தமிழகத்தில் நான்கு மண்டலங்களாக நான்கு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என்று 24.01.2022 சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தேன். அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், திருச்சியில் அனைத்து வசதிகளும் நிரம்பிய ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்பு, அறிவு திறன், தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல தமிழகம் உலகத்தோடு போட்டியிட விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அதற்காக இந்த ஒலிம்பிக் அகாடமி பெரும் துணையாக இருக்கும் என்று பேசினார்.

* தனது செயல்பாடுகளால் நிரூபித்தவர் உதயநிதி
மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘மேடைக்கு புதியவராக, அமைச்சராக வந்துள்ள தம்பி உதயநிதியை வரவேற்கிறேன். அமைச்சரவைக்கு தான் புதியவர். உங்களுக்கு பழகிய முகம் தான். அவர் அமைச்சராக வந்தபோது விமர்சனங்கள் வந்தது. வரத்தான் செய்யும். என் செயல்பாட்டை பாருங்கள் அதன் பின் விமர்சியுங்கள் என்றார். அவர் எம்எல்ஏவாக பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வந்தது. அதற்கெல்லாம் தன்னுடைய செயல்பாட்டால் பதில் சொல்லி பாராட்டுகளை பெற்று தன்னை நிரூபித்துக் காட்டினார். உதயநிதிக்கு  ஏராளமான பொறுப்புகள் உள்ளது. அமைச்சர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது’ என்று  தெரிவித்தார்.

Tags : Olympic Academy ,Trichy ,Chief Minister ,M.K.Stal , Olympic Academy to be set up in Trichy with all facilities to provide world class training: Chief Minister M.K.Stal announced
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...