×

உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய பின்னர் புடினை எதிர்த்த 10 பிரபலங்கள் மர்மமாக இறந்தது எப்படி?: ரஷ்யா மட்டுமின்றி ஸ்பெயின், இந்தியாவிலும் அரங்கேற்றம்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய பின்னர் இதுவரை 10 பிரபலங்கள் மர்மமான முறையில் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ரஷ்யா மட்டுமின்றி இந்தியா, ஸ்பெயினிலும் மர்மமாக இறந்ததால் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.
ரஷ்யாவின் முன்னாள் எம்பியும், பெரும் தொழிலதிபருமான பாவெல் அன்டோவ், உக்ரைனுடனான ரஷ்யப் போரைத் தொடர்ந்து இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பாவெல் அன்டோவ் மற்றும் அவரது 3 நண்பர்கள் ஆகியோர் ஒடிசா மாநிலம் ராயகடாவில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த 21ம் தேதி அன்டோவ் உள்ளிட்ட 4 நண்பர்களும் அதிகளவில் மதுபானம் குடித்திருந்தனர். அப்போது பாவெல் அன்டோவ் தனது 66வது பிறந்த நாளை அங்கு கொண்டாடினார். அடுத்தநாள் காலையில் அவர்களுள் விளாடிமிர் புடானோவ் என்பவர் அவரது அறையில் இறந்து கிடந்தார்.

போலீசாரின் விசாரணையில், இறந்தவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்ததாகவும், அதிகளவு மது அருந்தியிருந்ததால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. விளாடிமிர் புடானோவ் உயிரிழந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, பாவெல் அன்டோவ் அதே ஓட்டலின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மரணமடைந்திருக்கிறார். ஒரே வாரத்தில் இரண்டு ரஷ்யர்கள் அதே ஓட்டலில் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் சந்தேகத்தைக் கிளப்பியது. இருப்பினும் ராயகடா போலீஸ், பாவெல் அன்டோவின் இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்று கூறிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் எஸ்.பி விவேகானந்த சர்மா, `டிசம்பர் 21ம் தேதி ராயகடாவில் உள்ள ஓட்டலில் நான்கு பேர் தங்கவந்தனர். அடுத்த நாள் அவர்களில் ஒருவர் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவருக்கு இதயம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதில், தன் நண்பன் உயிரிழந்ததன் காரணமாக பாவெல் அன்டோவ் மிக மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். தற்போது கடந்த 25ம் தேதி அவர் தற்கொலை செய்துள்ளார்’ என்றார். ரஷ்ய முன்னாள் எம்பி பாவெல் அன்டோவ், இந்தியாவில் மரணமடைந்த விவகாரம் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் புடினுக்கு எதிராக கருத்து கூறியவர்களின் மர்ம மரணங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்தாண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பின்னர், புடினை விமர்சித்த 10 பிரபலங்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

* ரஷ்யாவின் ரயில் நிறுவன அதிகாரி பாவெல் செல்னிகோ (55) என்பவர் பணியில் இருந்த காலத்தில் மர்மமான முறையில் இறந்தார். இவர், தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக ரஷ்ய ஊடகங்கள் கூறின. உக்ரைன் உடனான போரில் ரயில் மூலம் சப்ளை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது அவர் புடினின் கடுங்கோபத்திற்கு ஆளானார். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டார். ரஷ்ய ஊடகங்களின்படி, உக்ரைன் ஹேக்கர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்றும், அதனால் ரயில்வே நெட்வொர்க்கை மூட வேண்டியிருந்ததாக பாவெல் செல்னிகோ கூறினார். அதன்பின்னரே அவர் மர்மமாக இறந்தார்.
* பாவெல் செல்னிகோவ் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அதிபர் புடினுக்கு நெருக்கமான உதவியாளரும், விமான போக்குவரத்து தலைவராக இருந்த அனடோலி கெராஷ்செங்கோ (73), மாஸ்கோ ஏவியேஷன் இன்ஸ்டிடியூட்டின் (எம்ஏஐ) விமானத்தின் படிகட்டுகளில் இருந்து கீழே விழுந்ததால் திடீரென இறந்தார். இவரது மரணத்திலும் மர்மம் நீடிக்கிறது.
* கடந்த செப்டம்பரில், ரஷ்யாவுக்கான ஆர்க்டிக் வளங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளரும், புடினின் நெருங்கிய உதவியாளரான இவான் பெச்சோரின் (29) மரணமும் மர்மமாக நடந்தது. படகில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்து இறந்ததாக கூறப்பட்டது.
* ரஷ்ய எண்ணெய் நிறுவன தொழிலதிபர் ரவில் மக்னாவ் (64) என்பவர் மாஸ்கோவின் மத்திய கிளினிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகவும், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்பட்டது.
* உக்ரைன் மீதான போர் தொடங்கிய அடுத்த நாள், ரஷ்ய எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் நிறுவனத்தின் மூத்த துணை இயக்குநர் அலெக்சாண்டர் துயுலாகோ (61) என்பவரின் உடல், மர்மமான முறையில் சடலமாக வீட்டின் கேரேஜில் கண்டுபிடிக்கப்பட்டது.
* காஸ்ப்ரோம் இன்வெஸ்ட் நிறுவனத்தின் போக்குவரத்துத் தலைவரான லியோனிட் ஷுல்மான் (64) என்பவரை மர்ம நபர்கள் தாக்கியதால், அவரது உடல் வீட்டின் குளியலறையில் கண்டுபிடிக்கப்பட்
டது.
* காஸ்ப்ரோம்பான் துணை அதிபராக இருந்த விளாடிஸ்லாவ் எவாயேவ் (51), மாஸ்கோவில் உள்ள அவரது பென்ட்ஹவுஸில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* ரஷ்யாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான செர்ஜி புரோட்டோசென்யா (55) என்பவர் ஸ்பெயினில் இருந்த போது, அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
* மற்றொரு ரஷ்ய கோடீஸ்வரரான வாசிலி மெல்னிகோ, அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் நிஷ்னி நவோகர்ட்டில் உள்ள ஆடம்பர குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். அவர்களது உடலில் காயங்கள் இருந்தன. மெல்னிகோ முதலில் தனது குடும்பத்தைக் கொன்றுவிட்டு பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், மெல்னிகோ தனது குடும்பத்தினர் மரணத்திலும் மர்மம் நீடிக்கிறது.

இவ்வாறாக உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்கள் முடிந்த நிலையில் கிட்டத்தட்ட 10 பிரபலங்கள் மர்மமான முறையில் ரஷ்யாவில் மட்டுமின்றி இந்தியா, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் இறந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ரஷ்ய அதிபர் புடினை விமர்சித்தவர்கள் அல்லது எதிர்த்தவர்கள் என்று கூறப்படுகிறது. எனவே ரஷ்யாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் மற்றும் அந்நாட்டு அதிபர் புடின் குறித்து அமெரிக்க ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.


Tags : Putin ,Ukraine ,Russia ,Spain ,India , How 10 celebrities who opposed Putin died mysteriously after the attack on Ukraine began?: Staged not only in Russia, but also in Spain and India
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...