×

வைகுண்ட ஏகாதசி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஜன.2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: மாலையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது

நாகர்கோவில்: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வரும் ஜனவரி 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று மாலையில் லட்ச தீபமும் ஏற்றப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆக கணக்கிடப்படுகிறது. மார்கழி மாதம் தேர்வர்களுக்கு அதிகாலை நேரம் ஆகும். இது மகாவிஷ்ணு துயில் எழும் நேரம். எனவே இந்த மாதம் வருகின்ற ஏகாதசி தனி சிறப்பு பெறுகிறது. மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை பாடி பெருமாளை வணங்குகின்றவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கிறது புராணங்கள்.

அந்த வகையில் மகா விஷ்ணுவை தியானித்து இரவில் கண்விழித்து விரதம் இருப்பவர்களுக்காக சொர்க்கவாசலை திறந்து வைத்துக்கொண்டு இறைவன் காத்திருக்கிறார் என்கின்றனர். மாதத்திற்கு 2 ஏகாதசி என்று ஆண்டு முழுவதும் 24 ஏகாதசிகள் விரதம் இருந்தாலும் மார்கழி மாத வளர்பிறையில் வருகின்ற ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பை பெறுகிறது. இந்த நாளில் தான் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் திறக்கப்படுகிறது.

2023ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி வரும் ஜனவரி மாதம் 2 மற்றும் டிசம்பர் மாதம் 23ம் தேதி என்று இரண்டு முறை வருகிறது. வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி நடைபெற இருக்கின்ற முதல் வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டங்கள் பெருமாள் கோயில்களில் கோலாகலமாக தொடங்கியுள்ளன. குமரி மாவட்டத்தில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வரும் 2ம் தேதி நடைபெற உள்ளது. தென் இந்திய வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று, 13 மலைநாட்டு திருப்பதிகளில் இரண்டாம் திருப்பதி, நம்மாழ்வரால் மலை மாடத்தரணை மேல் வட்டாற்றான் என்று மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகளை பெற்றது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் ஆகும்.

இங்குள்ள பெருமாள் புஜங்க சயனம், வலது கை யோக முத்திரையுடனும், இடது கை நீட்டிய நிலையிலும், தெற்கே திருமுகம், வடக்கே திருப்பாதத்துடன் ஸ்ரீசேச சயன நிலையில் காட்சியளிக்கிறார். இத்திருத்தலத்தில் வரும் 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வையொட்டி அன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு கணபதி ேஹாமம், சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அகண்ட நாம ஜெபம், மதியம் அன்னதானம் ஆகியன நடக்கிறது.

மாலை 6 மணிக்கு புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் வழியாக சுவாமி கருட வாகனத்தில் பவனியாக எழுந்தருளல் ஆகியன நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 2ம் தேதி அன்று மாலையில் 6 மணிக்கு புஷ்பாபிஷேகம் முடிந்த உடன் லட்ச தீபம் ஏற்றப்பட்டு அதன் பிறகு தீபாராதனை நடைபெற உள்ளது. இத்திருத்தலத்தில் லட்ச தீபம் காணக்கிடைக்காத கண்கொள்ளாத காட்சிகளில் ஒன்றாகும். வைகுண்ட ஏகாதசியையொட்டி விரிவான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Tags : Ekadasi ,Perumal ,Opening of , Opening of Vaikunda Ekadasi, Thiruvatar Adikesava Perumal Temple, Sorkavasal
× RELATED திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்