×

திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் புதிய தொழில்நுட்பத்தில் ராட்சத கிரேன் உதவியுடன் சிறுபாலம் அமைக்கும் பணி: விரைந்து முடிப்பதால் பொதுமக்கள் பாராட்டு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ப்ரீ காஸ்ட் கான்கிரீட் (புதிய) தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால் சிறுபாலம் அமைக்கும் பணி அசுர வேகத்தில் நடப்பது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகராகும். அண்ணாமலையார் கோயிலை தரிசிக்கவும், கிரிவலம் செல்லவும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். குறிப்பாக, சமீப காலமாக வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. எனவே, நகரின் பெரும்பாலான சாலைகள் நெரிசலில் திணறுகின்றன.

அண்ணாமலையார் கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகள், பஸ் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையான சின்னக்கடை வீதி, மத்தலாங்குளத்தெரு, அண்ணா சாலை போன்ற இடங்களில், நீண்ட வரிசையில் வகானங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன பயன்பாடு அதிகமுள்ள சாலைகளை பராமரிப்பு பணிக்காக சீரமைத்தல், வடிநீர் கால்வாய் அமைத்தல், சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையின் முக்கிய சாலைகளான பெரிய தெருவில் இருந்து அம்மணி அம்மன் கோபுரத்துக்கு செல்லும் இணைப்பு சாலை, சின்னக்கடை தெரு ஆகிய இடங்களில் தற்போது சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் வசதிக்கான சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், இந்த பணியால் மக்கள் பாதிக்காதபடி, பாலத்தை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க,  ப்ரீ காஸ்ட் கான்கிரீட் (புதிய) தொழில்நுட்பத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே கான்கிரீட் கட்டுமானம் செய்து ராட்சத வாகனங்களில் கொண்டுவரப்படும் பாலம், ராட்சத கிரேன் உதவியுடன், சாலையின் நடுவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாலத்திற்கான பள்ளத்தில் பொருத்தப்படுகிறது.

அதன்மூலம், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பாலம் பணி முழுமையாக முடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே பாலம் அமைக்க வழக்கமாக மாதக்கணக்கில் கால அவகாசம் தேவைப்படும். ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சில நாட்களில் அந்த பணிகள் முடிந்து, சாலை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதால், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் முக்கிய நகரங்களிலும், போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும் பாலங்களை அமைக்க  ப்ரீ காஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. அதன்மூலம், போர்க்கால அடிப்படையில், இரவோடு இரவாக பாலங்கள் அமைக்கப்பட்டு, சாலையில் வாகன போக்குவரத்து தடையின்றி செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Tiruvannamalai , Thiruvannamalai, new technology, construction of small bridge,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...