×

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட நாகை-மைசூர் நெடுஞ்சாலை 12 ஆண்டுக்கு பிறகு சீரமைப்பு: பொதுமக்கள் பாராட்டு

நீடாமங்கலம்: நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை 12 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நாகையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை நீண்ட சாலை என்றும் கூறப்படுகிறது. இந்த சாலை வழியாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும், பல மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாவாக பயணிகள், பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் டெல்டா மாவட்டங்களில் உள்ள திருச்சி மலை கோட்டை, கல்லணை, தஞ்சை பெரியகோவில் மற்றும் ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள ஆலங்குடி குருகோயில் உள்ளிட்ட நவகிரக கோயில்களுக்கும், வேளாங்கண்ணி பேராலயம், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் தினந்தோறும் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த சுற்றுலா பயணிகள் வரும் இந்த நெடுஞ்சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் வழியாக நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் பழுது ஏற்படுவதால் பெரும்பாலும் வருவதில்லை. இந்த சாலை தஞ்சாவூரிலிருந்து, நாகப்பட்டினம் வரை மிகவும் மோசமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நான்கு வழிச்சாலை தஞ்சையிலிருந்து நாகை வரை சில இடங்களில் இடை இடை சாலை பணி தொடங்கி நடைபெறுகிறது.

ஆனால் நீடாமங்கலம் அருகில் கோயில் வெண்ணியிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகை வரை பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இந்த சாலையை சீரமைக்க கோரி சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தனர்.

வாகன ஓட்டிகள், தொண்டு அமைப்பினரும் சாலையை சீரமைக்க கோரிக்கைகள் விடுத்து வந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்ட சாலைகளில் இதுவும் ஒன்று. பிறகு தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்களின் கோரிக்கைகளை ஏற்று தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு சுமார் ரூ.114 கோடி மதிப்பில் பூமிபூஜை போட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி நீடாமங்கலம் அருகில் தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையறிந்த, அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Nagai-Mysore Highway , Nagai-Mysore highway, renovation after 12 years, public appreciation
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...