திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்: திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: திருச்சியில் ரூ.238 கோடி மதிப்பில் 5,635 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.238.41 கோடி செலவில் 5635 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.308.29 கோடி மதிப்பீட்டிலான 5951 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  22,716 பயனாளிகளுக்கு ரூ.79.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இன்றைய தினம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் முதலமைச்சர் இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள்:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 33 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் பாலக்கிருஷ்ணம்பட்டி, உப்பிலியபுரம், கூத்தப்பார், ச. கண்ணனூர், சிறுகமணி ஆகிய பேரூராட்சிகளிலும், இலால்குடி, மணப்பாறை ஆகிய நகராட்சிகளிலும் மேம்படுத்தப்பட்ட பூங்காங்கள் மற்றும் சாலைகள், புதிய பாலங்கள், குழந்தைகள் மையம், உயர்கோபுர மின் விளக்குகள், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள், வாரச்சந்தையில் நுண் உரம் தயாரிக்கும் மையம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் பஞ்சக்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்.சி.வி. இராமன் பூங்கா, கீழ்ப்புலிவார் சாலைப் பகுதிகளில் கனரக லாரிகள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள்;

நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் 2 கோடி ரூபாய் செலவில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், பாலக்குறிச்சி யாகபுரம் பகுதியில் தெற்கு வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலம்;

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தொட்டியம் வட்டம் - நத்தம், இலால்குடி நகராட்சி - பச்சாம்பேட்டை ஆகிய இடங்களில் 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகக் கட்டடங்கள்;

உயர்கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, ஈவெ.ரா. பெரியார் கல்லூரி வளாகத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு மையத்திற்கான புதிய கூடுதல் அலுவலகக் கட்டடம்;

ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் துறையூர் நகராட்சி - நாகூர் பச்சமலை அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளியில் 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;     

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் - டாப்செங்காட்டுப்பட்டி, துறையூர் ஊராட்சி ஒன்றியம் - தண்ணீர் பள்ளம், சின்னபழமலை ஆகிய இடங்களில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப் பள்ளிகளில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் அறையுடன் கூடிய வகுப்பறை கட்டடங்கள்;

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் திருச்சிராப்பள்ளி - கிழக்கு மற்றும் மேற்கு, சிறுகாம்பூர், துறையூர், மணப்பாறை, வையம்பட்டி, வளநாடு, தொட்டியம், சோமரசம்பேட்டை, மணிகண்டம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள், மணப்பாறையில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 197 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் முடிவுற்ற உட்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட 5598 பணிகள்; என மொத்தம் 238 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5635 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மேலும், இவ்விழாவில் முதலமைச்சர் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் விவரங்கள்: உயர்கல்வித் துறை சார்பில் மணப்பாறை வட்டம், பண்ணப்பட்டி மேல்பாகம் கிராமத்தில் ரூபாய் 14 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிக் கட்டடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மணப்பாறை நகராட்சி - புத்தாநத்தம், திருமலையான்பட்டியில் புதிய துணை சுகாதார நிலையம் மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் கூடிய தாய்-சேய் நலக் கட்டடங்கள்;

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூவாளூர் பேரூராட்சி, முசிறி ஊராட்சி ஒன்றியம் - புலிவலம், தாத்தையங்கார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் - செவந்தாம்பட்டி, உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் - கொப்பம்பட்டி ஆகிய இடங்களில் புதிய கால்நடை மருந்தகக் கட்டடங்கள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 283 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட 5,944 பணிகள் என மொத்தம் 308 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 5951 புதிய  திட்டப்பணிகளுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று  அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில்  முதலமைச்சர் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் விவரங்கள்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 6.86 கோடி ரூபாய் மதிப்பில் 1448 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பிரதமமந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 33.40 கோடி ரூபாய் மதிப்பில் 1392 பயனாளிகளுக்கு குடியிருப்புகள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை என 77.02 இலட்சம் ரூபாய் மதிப்பில் 11,746 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், நெல் விதைகளுக்கான உற்பத்தி மானியம், எண்ணெய் வித்து உற்பத்தி மானியம் என 1.16 கோடி ரூபாய் மதிப்பில் 354 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பண்ணை குட்டை அமைத்தல், சோலார் மின் மோட்டார் அமைத்தல், மானியத்தில் மின் மோட்டார் வழங்குதல், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் வழங்குதல் என 2.48 கோடி ரூபாய் மதிப்பில் 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத் துறை சார்பில் பயிர்கடன், மத்தியக்காலக் கடன், சம்பளச் சான்று கடன், மகளிருக்கான கடன், கைம்பெண்களுக்கான கடன் என 6.58 கோடி ரூபாய் மதிப்பில் 715 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், ஊன்றுகோல், சிறு,குறு தொழில்களுக்கான வங்கிக்கடன், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என 57.71 இலட்சம் ரூபாய் மதிப்பில் 591 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் விபத்து மரண நிதியுதவி, இயற்கை மரண நிதியுதவி, திருமண நிதியுதவி, ஓய்வூதியம், கல்வி நிதியுதவி என 23.58 இலட்சம் ரூபாய் மதிப்பில் 1000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதாரக்கடன் திட்டத்தின் கீழ் 5.50 கோடி ரூபாய் மதிப்பில் 311 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 79 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் புதிய முதலீடுகளை அரசு ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன என்று கூறினார். எம்எல்ஏ ஆனபோதும் உதயநிதி மீது விமர்சனங்கள் வந்தன. ஆனால் தனது செயல்பாட்டினால் அதற்கு பதிலளித்தார்.

அதேபோல் அமைச்சர் ஆனதற்கும் வந்துள்ள விமர்சனங்களுக்கு செயல்பட்டால் பதில் தருவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்கு தான் உதயநிதி புதியவர். உங்களுக்கு அவர் பழையமுகம் தான். அமைச்சர் உதயநிதிக்கு முக்கியமான துறைகள் வழங்கப்பட்டு உள்ளன. தனக்கு ஒதுக்கப்பட்ட துறையை சிறப்பாக நடத்தி அனைவரது பாராட்டையும் பெறுவார் என நம்பிக்கை உள்ளது  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்கு தமிழக இளைஞர்கள் தயாராக ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும். உலக தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன என்று முதல்வர் தெரிவித்தார்.

பெண்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் முதல்முறையாக மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைத்தவர் கலைஞர். பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை. தமிழ்நாட்டில் 4,38,000 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன.

50,24,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க முதல்முறையாக முனைப்பு காட்டியது திமுக அரசுதான் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. 33 சுய உதவிக்குழுக்களுக்கு இன்று மணிமேகலை விருது வழங்கப்பட்டுள்ளது. மகளிரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை அரசின் கடமையாகவும் பொறுப்பாகவும் நினைக்கிறோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Related Stories: