பெரியகுளம் நகராட்சியில் ‘உர உற்பத்தி ஜோரு’ குப்பைக்கழிவு டூ இயற்கை, மண்புழு உரம்: விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு குவியுது

பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. திமுக அரசு தற்போது விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பெரியகுளம் நகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் உரமாக மாற்றப்பட்டு விவசாய நிலங்களுக்கு செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில், பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டை கடந்த நகராட்சியாகும்.இந்த நகராட்சியில் நாள்தோறும் சேரும் குப்பைகளை உரமாக மாற்றுவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர். குறிப்பாக இங்கு 30 வார்டுகளில் சேகரமாகும் மக்கும், மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்கு தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

குப்பையானது நகராட்சி குப்பைக்கடங்கில் தரம் பிரிக்கப்பட்டு உரக்குடில்கள் அமைக்கப்பட்டும் பாத்திகள் மூலமும் இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையாக உள்ள காய்கறிகள், வீணான உணவுப்பொருட்கள், இலைகள், என தனியாக பிரிக்கப்படுகிறது. மறுபுறம் மக்காத குப்பைகளாக உள்ள பிளாஸ்டிக், பாட்டில், தகரம், இரும்புக்கழிவுகள், செரட்டைகள் என தனியாக வாங்கப்படுகிறது. தமிழக அளவில் உள்ள நகராட்சிகளில் அதிக ஏக்கர் பரப்பில் இங்கு உரம் தயாரிக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான உபகரணங்களும் உள்ளன. பெரியகுளம் விவசாயம் அதிகம் நிறைந்த நன்செய், புன்செய் நிலங்களை கொண்டுள்ளது. எனவே விவசாயிகள் பயன்பெறவும், இயற்கை உரத்தை வாங்கி பயன்படுத்திடவும் இங்கு சிறப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.

குறிப்பாக மக்கும் குப்பைகளில் இருந்து, தயாராகும், உரம் விவசாயிகள் நேரடியாக கொள்முதல் செய்து வாங்கி செல்கின்றனர். மறுபுறம் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த திட்டத்தினை மேலும் விரிவு படுத்தி இன்னும் அதிக இயற்கை மற்றும் மண்புழு உரங்கள் தயாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே பெரியகுளம் நகராட்சியில் உள்ள கழிவு நீரேற்று நிலையம் மற்றும் குப்பை கிடங்கை நவீனப்படுத்தி இயந்திரங்கள் புதிதாக வாங்கி மேலும் இயந்திரங்களை கையாளுவதற்கு உண்டான பணியாளர்களை நியமனம் செய்து கழிவுநீரையும் கழிவு பொருட்களையும் இயற்கை உரமாக மாற்றும் திட்டத்திற்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகமும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்; குப்பை கிடங்கில் பல வருடமாக தேங்கி உள்ள குப்பைகளை உரமாக மாற்றுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை மிக சிறப்பான முறையில் தொட்டிகள் கட்டி, தயாரிப்பதில் எங்களது நகராட்சி வழிகாட்டியாக உள்ளது. இதற்கென தனியாக பணியாளர்களை நியமித்து தனிக்கவனம் செலுத்துகிறோம். பொதுமக்களும் தங்களது வீடு தேடி வரக்கூடிய தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பையாக பிரித்து வழங்கினால் மிக சிறப்பாக இன்னும் இத்திட்டம் செயல்படுத்திட ஊக்கமாக அமைந்திடும். விவசாயிகள் மத்தியில் இயற்கை உரத்தை வாங்கிட ஆர்வம் அதிகரிப்பதால் இதன் உற்பத்தியை இன்னும் பெருக்கிட திட்டங்களை தீட்டி வருகிறோம். இத்திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்தி தமிழத்திற்கே முன்னுதாரணமாக மாற்றி காட்டுவோம், என்றனர்.

Related Stories: